"படிப்பை முடித்த கையோடு பெரிய நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் லண்டன் சென்ற நான், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் இந்தியா திரும்பினேன்," என்கிறார் நந்தினி ராய்.
தெலுங்கில் அறிமுகமான இவர் இப்போது கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார். தமிழில் இவரது முதல் படம் 'கிரகணம்'. அடுத்து முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
"எனது சொந்த ஊர் ஹைதராபாத். இயற்பெயர் நீலம் கௌராணி. அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அவர்களுடைய குழந்தை என மகிழ்ச்சியான குடும்பம். பட்டப்படிப்பை முடித்த கையோடு மேல்படிப்புக்காக லண்டன் சென்றுவிட்டேன்.
"அப்்பா தொழிலதிபர். அம்மாதான் குடும்பம் தொடர்பான அனைத்தையும் முடிவு செய்வார். அவரது அறிவுரையைப் பின்பற்றியே லண்டன் சென்றேன்.
"பெண்களுக்கு கல்வியறிவு முக்கியம் என எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். படிப்பை முடித்த பிறகு மற்ற நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டும் என்றும் அதன் பிறகு அப்பாவின் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளைக் கவனிக்கலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன்.
"ஆனால் சினிமா மீதான ஆர்வம் அதை மாற்றிவிட்டது," என்கிறார் நந்தினி.
கல்லூரியில் படிக்கும்போதே விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்ததாம். 'மிஸ் ஆந்திரா', 'மிஸ் ஹைதராபாத்' என்று சில பட்டங்களையும் வென்றுள்ளார். அதனால் மாடலிங், விளம்பரம், அழகிப்போட்டி வட்டாரங்களில் நந்தினி ராய் ஏற்கெனவே ரொம்பப் பிரபலம்.
எடுத்த எடுப்பிலேயே பல சினிமா வாய்ப்புகள் தேடிவந்தனவாம். எனினும், அழகிப் போட்டிகளிலும் ஃபேஷன் நிகழ்ச்சிகளிலும் ஓரளவு சாதித்த மனநிறைவு ஏற்பட்டதும்தான் சினிமாவில் கணக்கை தொடங்கியதாகச் சொல்கிறார்.
நந்தினியின் மனம் கவர்ந்த நடிகை சௌந்தர்யா. அவர் நடித்த படங்களை அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துள்ளாராம்.
"சௌந்தர்யாவைப் போல் அழகும் திறமையும் நிறைந்த நடிகைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு விளம்பரத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"எப்போதுமே அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அவரும் அனைவருடனும் சளைக்காமல் பேசுவார், நடிக்கவும் செய்வார். படப்பிடிப்புத்தளத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்க வியப்பாக இருக்கும்.
"அப்போதுதான் சினிமா ஆசை என்னுள் எட்டிப் பார்த்தது. சௌந்தர்யாவைப் போலவே நாமும் புகழடைய வேண்டும் என விரும்பினேன்," என்கிறார் நந்தினி.
தெலுங்கில் இவர் அறிமுகமான படம் 'மாயா'. ஹர்ஷவர்தன் நாயகனாக நடித்துள்ள இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, 'மொசகல்லக்கு மொசகாடு' உட்பட மேலும் சில படங்களில் நடித்து வருகிறாராம். இந்தியிலும் 'ஃபேமிலி பேக்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் அடுத்து இயக்கும் 'கிரகணம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கான நாயகிக்கான தேர்வு நடந்தபோது நிறைய பேர் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் ஒப்பனைத் தேர்வும் நடந்துள்ளது. இறுதியில் இயக்குநர் இவரைத் தேர்வு செய்தார்.
நந்தினிக்குப் பிடித்த தமிழ் நடிகர் விஜய் சேதுபதி. அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிக்க முடிகிறது என்கிறார்.
"சேதுபதி சாருடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவரை அந்த அளவு எனக்குப் பிடிக்கும். அவருடன் திரையில் தோன்றும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்," என்கிறார் நந்தினி.
, :
நந்தினி ராய்

