திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
fd51ba5b-e2fc-4958-9054-a42a12d64da2
-
multi-img1 of 3

நிறைவேறியது நீண்டநாள் கனவு

தமது 19 ஆண்டுகால கனவு இப்போது நிறைவேறி உள்ளது என்கிறார் நடிகர் ஜெய். நீண்ட முயற்சிக்குப் பிறகு அவர் இசையமைப்பாளராகி உள்ளார்.

திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாக வேண்டும் என்பதுதான் இவரது இளமைக்கால கனவாம். ஆனால் எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டதாகச் சொல்கிறார்.

இந்நிலையில், 'சிவ சிவா' என்ற படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகி உள்ளார். அவரது இசையில் உருவான 'காட முட்ட' என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை வைரமுத்து எழுதி உள்ளார். அனல் ஆகாஷ் பாடி உள்ளார்.

"இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனது நீண்ட நாள் கனவு நனவானதுடன், ரசிகர்களிடம் பாராட்டும் வாழ்த்தும் கிடைப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது," என்கிறார் ஜெய்.

மகிமாவுக்கு மேலும் ஒரு விருது

அடுத்தடுத்து இரு விருதுகளைப் பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் மகிமா நம்பியார்.

அண்மையில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் 'மகாமுனி' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடி முடிப்பதற்குள் கனடாவில் நடைபெற்ற டொரோன்டோ அனைத்துலக திரைப்பட விழாவிலும் அவருக்கு விருது கிடைத்துள்ளது.

இம்முறையும் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார் மகிமா. மேலும், சிறந்த படத்துக்கான விருதையும் 'மகாமுனி' பெற்றுள்ளது.

இதனால் அப்படக்குழுவும் உற்சாகத்தில் மிதக்கிறது.

சாந்தகுமார் இயக்கத்தில் உருவான 'மகாமுனி' படத்தில் ஆர்யா நாயகனாகவும் இந்துஜா, மகிமா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தியில் மறுபதிப்பாகிறது '96'

தமிழில் பெரும் வெற்றி பெற்ற '96' திரைப்படம் இந்தியில் மறுபதிப்பாகிறது. அஜய்கபூர் தயாரிக்கிறார். இத்தகவலை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ள விஜய் சேதுபதி, மறுபதிப்பு வெற்றிபெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.