பொங்கலுக்கு வருகிறது 'வலிமை'
அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அஜித்தின் 60ஆவது படமாகும். எச்.வினோத் இயக்கி உள்ளார்.
ஹுமா குரேஷி நாயகியாகவும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது. அச்சமயம் ரஜினியின் 'அண்ணாத்த' படமும் தீபாவளி வெளியீடு என்பதால் இரு படங்களுக்கு இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 'வலிமை' அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
காஜலுக்குப் பதில் இலியானா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்னிந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் இலியானா.
பாலிவுட்டில் இருந்து திரும்பியுள்ள அவரை சூட்டோடு சூடாக, நாகார்ஜுனா நாயகனாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால்தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், திடீரென அவர் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கவே, இலியானா ஒப்பந்தமானார்.
கைவசம் வேறு எந்தப் படமும் இல்லை என்றாலும், அவருக்கு பெருந்தொகை சம்பளமாகப் பேசப்பட்டிருப்பதாகத் தகவல். மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தாமதமாகும் 'லிஃப்ட்' வெளியீடு
'பிக்பாஸ்' கவின் நாயகனாக நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படத்தை வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்ரிதா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை 'ஈகா' நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், வெளியீட்டு உரிமையை 'லிப்ரா' நிறுவனம் வாங்கி இருந்தது. இதையடுத்து படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. இந்நிலையில், இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை முதலீட்டாளர்களுக்கே அளிப்பதாக 'லிப்ரா' நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 'லிஃப்ட்' படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாயகன் கவின் வருத்தத்தில் மூழ்கியுள்ளாராம்.
நடிகை மீரா மிதுனுக்குப் பிணை
அவதூறு வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து அவர் வெளியே வருகிறார். அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளும் உடனுக்குடன் தொடங்க உள்ளன.
சில நாள்களுக்கு அவர் ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்கப்போவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

