"வேலைக்குப் போகாமல் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞன் திடீரென ஒரு சபதம் எடுக்கிறான். அது அவனது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் 'சிவகுமாரின் சபதம்' படத்தின் கதை," என்கிறார் 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி.
இப்படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, இசை என அனைத்துக்கும் இவர்தான் பொறுப்பு. கதையின் நாயகனும் இவர்தான்.
இசையமைப்பாளராக திரைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பும் பிறகும் பல்வேறு போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதித்திருப்பதாகச் சொல்கிறார் ஆதி.
"சினிமா துறையில் எனக்கு யாரையும் தெரியாத நிலையில்தான் அதற்குள் நுழைந்தேன். நிறைய அடிபட்டு, தவறுகள் செய்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
"இசையமைப்பாளராக வேண்டும் என்று நான் விரும்பியது நடந்தது. படம் இயக்க வேண்டும் என்ற கனவும் கைகூடியது. நம்மை நம்பி யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்து நானே நாயகனாக மாறினேன்.
"இப்போது சத்யஜோதி என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளேன். சினிமா உலகில் அனைத்துப் பணிகளையும் செய்து பார்த்துவிட்டு மனநிறைவு உள்ளது.
"இருப்பது ஒரு வாழ்க்கை. அதில் முடிந்தவரை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டு திரையுலகில் கால்பதித்தேன். அதுவே தாமதம் என்று இப்போது தோன்றுகிறது," என்கிறார் ஆதி.
'சிவகுமாரின் சபதம்' படம் இளையர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரையும் கவரும்," என்று குறிப்பிடுபவர், காஞ்சிபுரத்தில் தாம் சந்தித்த இளைஞர் ஒருவரை மனதில் வைத்து இப்படத்துக்கான கதையை உருவாக்கியதாகச் சொல்கிறார்.
"காஞ்சிபுரத்தில் இளையர்களைக் கொண்ட வித்தியாசமான குழு ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகளாக யார் வந்தாலும் இந்த குழுவினர் தேடிச் சென்று பேசுவார்கள்.
"அந்த பயணிகள் எதையெல்லாம் சுற்றிப்பார்க்க விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டறிந்து நல்ல முறையில் வழிநடத்துவார்கள்.
"நான் ஒருமுறை அங்கு சென்றபோது இந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் வருபவர்களிடம் எல்லாம் கலகலவென்று இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் அவருக்குத் தெரியாத இடங்களே இல்லை என்பது பேச்சிலேயே புரிந்தது.
"அங்குதான் என் படத்துக்கான கதாநாயகன் உருவானான். சரியாக தலை சீவாமல், பூப்போட்ட சட்டை, புல்லாங்குழல் வடிவிலான கால்சட்டை என நானும் அந்தக் குழுவின் உறுப்பினரைப் போலவே மாறிவிட்டேன்," என்கிறார் ஆதி.
தெலுங்கில் உருவாகும் 'ஏஜென்ட்' உட்பட இரண்டு படங்களுக்கும் தமிழில் ஒரு படத்துக்கும் இசையமைப்பதாகச் சொல்பவர், நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்தையும் முடிந்தவரை செய்வதுதான் தமது விருப்பம் என்கிறார்.
"காஞ்சிபுரத்தில் நெசவுத்தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இத்தொழிலை நம்பி உள்ளன. இந்தத் தொழிலில் நிறைய சிரமங்கள், சவால்கள் இருக்கின்றன.
"இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இவற்றைத்தான் திரையில் காட்ட முற்படுகிறேன். இதுவரை நான் சரியாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன்.
நடிகர் விவேக்கின் மரணம் தம்மை வெகுவாகப் பாதித்ததாக குறிப்பிடுபவர், அனைவர் மனதிலும் நேர்மறை சிந்தனைகளை விதைத்த அருமையான கலைஞர் விவேக் என்கிறார்.
"இதேபோல் இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவும் எதிர்பாராத சோகம். இதுபோன்ற இழப்புகளைப் பார்க்கும்போது நாம் எந்த அளவு ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்பது புரியும்.
"நாம் அனைவரும் சில காலம் இருக்கப் போகிறோம். அதற்குள் நாமும் வாழ்க்கையை அனுபவித்து பிறரையும் மகிழ்ச்சிபடுத்த வேண்டும். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து புலம்பாமல் நிகழ்காலத்தில் உற்சாகமாக இருக்க வேண்டும்.மேலும், முடிந்தவரை அனைவருக்கும் உதவ வேண்டும்," என்கிறார் ஆதி.

