படிப்பில் தமக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்று 'கோடியில் ஒருவன்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் விஜய் ஆண்டனி.
சிறு வயதில் சரியாகப் படிக்கவில்லை என்ற போதிலும் வாழக்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"இப்போது என்னவாக இருக்கிறேனோ, அதற்கான முழு தகுதி எனக்குக் கிடையாது. சரியாகப் படிக்கமாட்டேன். மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டுமென்றால் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். அது சாத்தியமில்லை என்பதால், அம்மாவை ஏமாற்றுவதற்காக திரை யுலகில் சாதிக்கப்போகிறேன் என்று சொன்னேன்.
"சில அனுபவங்களுக்குப் பின்னர் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. எல்லோரிடமும் நம்பிக்கையுடனே பேசத் தொடங்கினேன். ஆனால், எனக்கு முறையான நடிப்பு, இசை என எதுவுமே தெரியாது. நம்பிக்கையுடன் பேசிப்பேசி இப்போது உங்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கிறேன்," என்றார் விஜய் ஆண்டனி.
தன்னைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றிபெற்றால் அதற்கான பாராட்டு இயக்குநருக்குத்தான் போய்ச்சேர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஒரு படத்தின் நாயகன் என்றால் அது இயக்குநர்தான் என்றார். சினிமாவுக்கு கதை எழுதுவது ஒரு கருவைச் சுமப்பதற்கு இணையானது என்றும் 'பிச்சைக்காரன்' கதையை தம்மிடம் விவரித்தபோது இயக்குநர் சசி வாய்விட்டு அழுததாகவும் ஆண்டனி கூறினார்.
"கதையைச் சொல்லும்போதே அழுதார் என்றால், அதை எழுதியபோது எவ்வளவு முறை அழுதிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். இந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் மிகுந்த திறமைசாலி. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் தகுதி அவருக்குண்டு," என்றார் விஜய் ஆண்டனி.
'கோடியில் ஒருவன்' படம் வெளியாகி உள்ளது. விமர்சன, வசூல் ரீதியில் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன், புதுப் படங்களை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் கடுமையாக விமர்சனம் செய்வதாகக் கூறியுள்ளார்.
ஒரு படத்திலுள்ள நல்ல அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் சிலர் சகட்டுமேனிக்கு குறைகளை அடுக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்தச் சந்திப்புக்கு வந்துள்ள ஊடக நண்பர்கள் யாருமே அப்படிச் செய்வதில்லை. என்னிடமும் ஒரு யுடியூப் ஒளிவழி இருக்கிறது என்று நினைத்து, ஒரு படத்தை சகட்டுமேனிக்கு குறை சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு," என்றார் தனஞ்செயன்.
மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வந்து படங்களைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படும்போது, இல்லாத குறைகளைச் சொல்லி சிலர் தமிழ் சினிமாவைக் கெடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திரையுலகம் நன்றாக இருந்தால் மட்டுமே அனைவரும் நன்றாக வாழ முடியும் என்றார்.

