'மகான்' படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. தாம் எதிர்பார்த்ததைவிட படம் சிறப்பாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
நடிகர் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படம் இது. நிஜ வாழ்க்கையில் உள்ளபடியே திரையிலும் இருவரும் தந்தை, மகனாக நடித்துள்ளனர்.
அண்மையில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இருவரில் 'மகான்' பாத்திரத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"இந்தக் கேள்விக்கான பதில்தான் இந்தப் படத்தின் வலிமையான அடித்தளம். இதை அதிரடிப் படம் என்று ஒரே வரியில் சொல்லிவிட இயலாது. அடிதடிக்கு மத்தியில் நிறைய உணர்வுபூர்வமான விஷயங்களும் உள்ளன.
"தொழில்நுட்ப ரீதியாகவும் கதையிலும் அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டும் என்ற முடிவுடன் இந்தப் படத்தை இயக்குகிறேன். விக்ரம், துருவ் இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
"இந்தக் கதையை எழுதி முடித்ததும் விக்ரமிடம் விவரித்தேன். அவருக்கான சவால் இருப்பதை அறிந்ததும் உற்சாகத்துடன் நடிக்கச் சம்மதித்தார். இருவருமே தங்கள் உழைப்பைக் கொட்டி இருக்கிறார்கள்," என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
விக்ரம், துருவ் ஆகிய இருவருக்குமே படத்தில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். மேலும் பாபி சிம்ஹாவும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
"இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடித்தனர். அதனால் இயக்குநராக என் வேலை எளிதாக இருந்தது. விக்ரமுக்கு உள்ள அனுபவம் காரணமாக இந்த நுணுக்கம் தெரியும். ஆனால் துருவ்வுக்கும் இது தெரிந்திருப்பதுதான் ஆச்சரியம்.
"விக்ரம் என்ற பெரிய நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொள்வது சக நடிகர்களுக்கு நிச்சயம் சவாலான ஒன்றுதான். ஆனால் துருவ் இந்தச் சவாலை துணிவுடன் எதிர்கொண்டார்.
"படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு ஒருமுறை ஒத்திகை பார்த்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. எனினும், படப்பிடிப்பு சிக்கல் இன்றி நடந்தது.
"பொதுவாக ஒரு கதாபாத்திரம் சொல்வதைக் கேட்டு, அதற்கு பதில் பேசுவதுதான் காட்சிக்கு அழகு சேர்க்கும். அந்த வகையில் இருவரும் நேர்த்தியாக நடித்துள்ளனர்," என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
"கல்லூரியில் படித்தபோது அவர் நடித்த 'சாமி' படத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அப்படிபட்ட ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சினிமா உலகுக்கு வந்த நாள்முதல் அவரை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. 'இறைவி' படத்தை இயக்கியபோது அவரிடம் வேறு ஒரு கதையைச் சொல்லி இருந்தேன். அதன் பிறகு தொடர்பு இன்றிப் போய்விட்டது.
"இந்நிலையில், தயாரிப்பாளர் லலித்குமார் திடீரென்று ஒருநாள் கைபேசியில் அழைத்து, விக்ரம், துருவ் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டார். அப்படித்தான் 'மகான்' பட வேலைகள் தொடங்கின," என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
தனது எட்டு ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இந்த வாய்ப்பு அமைந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், தமது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களில் ஒன்றாக இப்படத்தில் பணியாற்றியதைச் சொல்லமுடியும் என்கிறார்.
"இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன் என இரண்டு நாயகிகள். சிம்ரனைப் பொருத்தவரை எதையும் அவருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லும் விஷயத்தை உள்வாங்கி தனது பாணியில் நடிப்பார். அதில் மாற்றம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வாணி போஜன் நல்ல கதாபாத்திரத்தில் தோன்றுவார்," என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
விக்ரம்
, :

