'சூர்ப்பனகை' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ரெஜினா. கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படத்துக்கும் புராணங்கள், வரலாறுகளுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லையாம். 'சூர்ப்பனகை' என்ற கதாபாத்திரத்துக்கே உரிய குணநலன்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார் இயக்குநர்.
"நமக்கு எல்லாம் நன்கு அறிமுகமான கதாபாத்திரம்தான் 'சூர்ப்பனகை'. இந்தப் பெயருக்கு உள்ளே ஒரு வில்லி, கதாநாயகி என இருவரும் உள்ளனர். தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே அவர் செய்திருக்கிறார்.
"இப்டத்தின் நாயகியும் அப்படிப்பட்டவர்தான். அதனால்தான் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம்.
"சூர்ப்பனகையின் மனதுக்குள் அழகான காதல் இருந்தது. அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தார். மனம் நிறைந்த துணிச்சலுடன் செயல்பட்டார். அதை இந்தப் படத்துக்கான அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டோம்," என்கிறார் கார்த்திக் ராஜு.
ரெஜினாவை மிகத் திறமையான நடிகை என்று பாராட்டுபவர், முழுக் கதையையும் அங்குலம் அங்குலமாகக் கேட்டு ரசித்த ரெஜினாவின் ஈடுபாடு தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகச் சொல்கிறார்.
இந்தக் கதையை எழுதும்போது ரெஜினாவை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதினாராம்.
"ரெஜினா எப்போதுமே நிறைய கேள்விகள் கேட்பார். எதற்காக இந்த வசனம், ஏன் இந்தத் தொனியில் பேச வேண்டும், இந்தக் காட்சியின் நோக்கம் என்ன என்று பலவிதமான சந்தேகங்களை எழுப்புவார். நாம் சொல்லும் பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால்தான் அந்தக் காட்சிக்குத் தயாராவார்.
"ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படம் இது. அதனால் ஒவ்வொரு வசனத்தையும் இருமுறை, வெவ்வேறு மொழிகளில் பேச வேண்டும்.
"ரெஜினாவின் திறமை இவ்விஷயத்தில் வெகுவாகக் கைகொடுத்தது. அனைத்து வசனங்களையும் அவற்றின் முக்கியத்துவம் கெடாத வகையில் உடனுக்குடன் பேசி அசத்தினார். இரு மொழிகளில் உடனுக்குடன் வசனம் பேசி நடிப்பது அவ்வளவு எளிதல்ல," என்று ரெஜினா புராணம் பாடுகிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.
'சூர்ப்பனகை'யில் கணினித் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'கிராஃபிக்ஸ்' காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார்.
ரெஜினாவுடன் அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்குமே இரட்டை வேடங்களாம். ஏன் இப்படி என்பதற்கு படம் பார்க்கும்போது உரிய விளக்கம் கிடைக்கும் என்கிறார்.
'சூர்ப்பனகை'யில் சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காதாம். சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் அக்காட்சிகளை அமைத்துள்ளார்.
"இயக்குநர் கார்த்திக் ராஜு என்னிடம் விவரித்த கதையை அப்படியே காட்சிப்படுத்தி உள்ளார். தேவையற்ற காட்சிகள் எதுவுமே இருக்காது. இது சவாலான கதைக்களம். எனது கதாபாத்திரமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் சூர்ப்பனகை என் திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருக்கும்," என்கிறார் ரெஜினா.
'சூர்ப்பனகை' மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையில் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வந்தது என்றாலும், இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படத்தின் தயாரிப்புத் தரப்பு மனம் மாறிவிட்டதாம்.
"என்னதான் புதுத் தொழில்நுட்பங்கள் வந்தாலும், வீட்டில் இருந்தபடியே புதுப் படங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், திரையரங்குகளில் ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை," என்கிறார் கார்த்திக் ராஜு.

