காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எளிமையாகப் பேசிப்பழகக் கூடியர் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,
தாம் இருக்கும் ஒவ்வொரு மேடையிலும் எஸ்.பி.பாலாவும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம் என்றார்.
"பாலுவுக்கும் எனக்குமான நட்பு எந்த மாதிரியானது என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். அந்தக் காலத்திலேயே மேடையில் ஆர்மோனியத்துடன் நான் அமர்ந்தேன் என்றால் பக்கத்தில் அமர்ந்து பாலு பாடுவார். எங்களைச் சுற்றி மற்ற அனைவரும் இருப்பார்கள்.
"இசையமைப்பாளராக ஆன பின்பும்கூட எங்களுடைய நட்பு தொடர்ந்தது. இருவருடைய உழைப்பினால்தான் பல பாடல்கள் உங்களை வந்து சேர்ந்துள்ளன. தொழில் வேறு, நட்பு வேறு என்பதில் தெளிவாக இருந்தோம்.
"பல மேடைகளில் என்னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து, அவருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அவர் மனத்தில் எனக்கு என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம்.
"பாலு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிய வந்ததும், ஒரு காணொளியை வெளியிட்டேன்.
"அதில், 'பாலு... உனக்காகக் காத்திருக்கிறேன் சீக்கிரம் வா' என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அந்த காணொளியைப் பார்த்தவுடன், உடனே கண்கலங்கி, கைபேசியில் தெரிந்த எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.
"யாரையாவது பார்க்க வேண்டுமா என்று எஸ்.பி.பி.யிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது 'ராஜாவை வரச் சொல்லுங்க' என்றாராம். அவர் மனதில் எத்தகைய இடத்தைக் கொடுத்திருந்தார் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒரு வார்த்தை போதாதா?" என்றார் இளையராஜா.