திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
37bb3ce6-aeb6-44be-89a7-631771f1005b
-
multi-img1 of 3

வம்சி இயக்கத்தில் 'விஜய் 66'

விஜய் நடிக்கும் 66வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதை அவரே தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில் அடுத்த படத்துக்கான கதைகளைக் கேட்டு வந்தார். அதன் முடிவில் வம்சி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழில் கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கியுள்ள வம்சி, தேசிய விருது பெற்றவர்.

இதற்கிடையே, தமது ரசிகர்களை தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சுவரொட்டிகளை வெளியிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் விஜய்.

இதுபோன்ற செயல்களை தாம் விரும்பவில்லை என்றும் தொடர்ந்து இவ்வாறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'சவாலான பாத்திரங்கள் பிடிக்கும்'

'நட்பே துணை', 'டிக்கிலோனா' என தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் அனேகா.

இந்நிலையில், சம்பளத்தைவிட தமக்கான கதாபாத்திரங்கள்தான் முக்கியம் என்ற கருதுவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"சவாலான பாத்திரங்களில் நடிக்கும் விருப்பம் உள்ளது. எனினும் நடிக்க வந்த புதிதில் இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் கூடாது என்றும் தோன்றுகிறது.

"எதிர்மறையான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்க முடிகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சங்கள் கொண்ட படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உற்சாகம் அளிக்கிறது," என்கிறார் அனேகா.

'ஆதிபுருஷ்' வெளியீட்டுத் தேதி

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படம் அடுத்த ஆண்டு வெளியீடு காணும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் முப்பரிமாண தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாசும் சீதையாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். ராவணனாக இந்தி நடிகர் சையிஃப் அலிகான் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

திருப்பதியில் நயன்தாரா தரிசனம்

நயன்தாரா என்ன செய்தாலும் அது செய்திதான். இந்நிலையில் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா.

அப்போது எடுக்கப்பட்ட காணொளிப் பதிவுகளை யும் புகைப்படங்களையும் பக்தர்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று காலை தரிசனம் முடிந்து வெளியே வந்த இருவரையும் ரசிகர்கள் ஏராளமானோர் சூழ்ந்துகொண்டனர். இதையடுத்து பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு கிளம்பிச் சென்றார் நயன்தாரா. இந்நிலையில் அவரது திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.