திரைப்பட விமர்சகரான 'ப்ளூ சட்டை' மாறன் இயக்கியுள்ள 'ஆன்டி இண்டியன்' படம் விரைவில் திரைகாண உள்ளது.
இணையத்தில் மாறன் வெளியிட்ட விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய அதே வேளையில் ஆதரவுக் குரல்களும் எழுந்தன.
இந்நிலையில், அவர் இயக்கியுள்ள படத்தை விமர்சிக்க ஏராளமானோர் காத்திருக்கின்றனர். மிகவும் போராடித்தான் படத்துக்கான தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார் மாறன். படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாபாவும் உடனிருந்தார்.
பெரிய பிரச்சினைகள் வரும் எனத் தெரிந்தே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏதேனும் ஓர் அடிப்படையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்துக்கு எப்படிச் சான்றிதழ் கொடுப்பது என்பது தணிக்கைக் குழுவுக்கே புரியவில்லை. காரணம், அந்த அளவுக்கு மாறுபட்ட ஒரு படத்தை உருவாக்கி உள்ளார் மாறன்.
"எனினும் படத்தைப் பாராட்டத் தவறவில்லை. இதுவே எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி," என்றார் தயாரிப்பாளர் ஆதம் பாபா.
அடுத்து பேசிய மாறன், தன் படம் வெளியாகக்கூடாது என்று சிலர் பல்வேறு விதமான அழுத்தங்களைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.
படத்தில் இடம்பெற்றுள்ள 38 முக்கிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று தணிக்கைக் குழுவினர் கூறிவிட்டனராம். ஆனால் அவற்றை நீக்கினால் படம் நிச்சயம் தோல்வி அடையும் என்பதால் மாறனும் தயாரிப்பாளரும் மறுத்துவிட்டனர்.
சான்றிதழை சென்னை, பெங்களூருவைச் சேர்ந்த தணிக்கைக் குழுவினர் வழங்க மறுத்த நிலையில், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், தணிக்கைக் குழுக்கள் எடுத்த முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும் புதிய குழுவையும் அமைத்தது.
"அக்குழுவினர் படம் பார்த்து மூன்று இடங்களில் மட்டுமே கத்திரி போட்டது. இதனால் 'யு/ஏ' சான்றிதழுதுடன் படம் வெளியாகிறது. தணிக்கையே வேண்டாம் என்று சொல்லவில்லை. எனினும் காலத்துக்கு ஏற்ப விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்," என்கிறார் மாறன்.
இவரது 'ஆன்டி இண்டியன்' எதைப் பற்றிப் பேசப்போகிறது?
"நாடே கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் சில சுயநல மனிதர்களைக் குறிக்கும் வகையில் தான் இப்படியோர் தலைப்பை வைத்துள்ளோம். ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால், 'கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை' என தலைப்பு வைக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தோம்.
"இந்தப்படம் எடுப்பதற்காக எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. ஆனால் எனது படம் வெளிவரக்கூடாது என்று திரையுலகில் இருந்தே பலவாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது என்கிற செய்தியையே மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்கள் பலர் உண்டு.
"சினிமாவில் புதிதாக ஒரு விஷயம் வரும்போது எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும். இந்த 'ஆன்டி இந்தியன்' படத்தை பார்க்கும்போது, அத்தகைய எண்ணம் ஏற்படும். ஆனால் படத்தின் முடிவில் நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள்," என்கிறார் விமர்சகரும் இயக்குநருமான மாறன்.

