'உழைப்புக்கான அங்கீகாரம்'

'உழைப்புக்கான அங்கீகாரம்'

3 mins read
ce065419-7b54-4a62-8147-3a680b7e70be
அனகா -

சிறந்த அறி­முக நடி­கைக்­கான விருது பெற்­ற­தால் உற்­சா­கத்­தில் மிதக்­கி­றார் இளம் நாயகி அனகா.

2021ஆம் ஆண்­டுக்­கான 'சைமா' விருதுகள் அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டன. அதில் தமக்­கும் விருது அறி­விக்­கப்­பட்­டது எதிர்­பா­ராத ஒன்று என அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த விருது தொடர்­பாக சிலர் விமர்­சித்­தி­ருப்­பது முத­லில் வருத்­தம் அளித்­தது என்­றும் பிறகு திரை­யு­ல­கில் இதெல்­லாம் வழக்­க­மான ஒன்று என்ற முடி­வுக்கு வந்­து­விட்­டதா­க­வும் கூறி­யுள்­ளார் அனகா.

"ஏனோ­தானோ என்று யாரும் விரு­து­களை அறி­விக்­க­மாட்­டார்­கள். ஒட்­டு­மொத்த இந்­தி­ய திரை­யு­ல­க­மும் கவ­னிக்­கும் விரு­து­களில் இது­வும் ஒன்று.

"பெரிய கலை­ஞர்­களுக்கு விருது கொடுத்து கௌர­வித்­துள்­ள­னர்.

"அந்த வரிசை­யில் எனக்­கும் ஒரு விருது கிடைத்­திருப்­பதை எண்ணி பெரு­மி­தம் கொள்­கி­றேன். எனது கடின உழைப்பை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் விருது கிடைத்­துள்­ளது.

"விமர்­ச­னங்­கள் நல்ல வித­மா­க­வும் நியா­ய­மா­க­வும் இருக்­கும்­போது அதை ஏற்­றுக்­கொள்ளத் தயங்­கி­ய­தில்லை," என்­கி­றார் அனகா.

திரைப்­ப­டப் பாடல்களை தொடர்ந்து கேட்­பது இவ­ரது முக்­கி­ய­மான பொழு­து­போக்­கு­களில் ஒன்­றாம். தாம் இளை­ய­ரா­ஜா­வின் தீவிர ரசிகை என்­றும் அவ­ரது பாடல்­கள் பல­ரது வாழ்க்­கையை மாற்­றி­ அமைத்­ததை தாம் கேள்­விப்­பட்­டுள்­ள­தா­க­வும் சொல்­கி­றார்.

சந்­தா­னம் நடித்த 'டிக்­கி­லோனா'வில் இவர்­தான் நாயகி என்­பது இளை­யர்­கள் அனை­வ­ருக்­கும் தெரிந்­தி­ருக்­கும். அதில் 'பேரு வெச்­சா­லும்' என்று தொடங்­கும், 'மைக்­கேல் மதன காம­ரா­ஜன்' படத்­தில் இடம்­பெற்ற பாடல் 'ரீமிக்ஸ்' செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்கு கிடைத்த வர­வேற்பு தம்மை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­கி­றார் அனகா.

"பட்டி தொட்டி எங்­கும் ஒலிக்க வேண்­டும் என்று சொல்­வார்­களே, அது எப்­படி இருக்­கும் என்­பதை இந்­தப் பாடல் மூலம் தெரிந்து கொண்­டேன். என் குடும்­பத்­தார், நண்­பர்­கள், தெரிந்­த­வர்­கள் என அனை­வ­ருமே இந்­தப் பாட­லைப் பற்­றித்­தான் பேசு­கி­றார்­கள். அதே­ச­ம­யம் முந்­தைய படத்­தில் இடம்­பெற்ற அசல் பாட­லுக்­கும் நான் தீவிர ரசிகை. அத­னால் 'ரீமிக்ஸ்' பாடலை ரசி­கர்­கள் ஏற்­றுக்கொள்­வார்­களா எனும் சந்­தே­கம் இருந்­தது. நல்ல வேளை­யாக அனை­வ­ருக்­கும் பிடித்­தி­ருக்­கிறது," என்று சொல்­லும் அனகா, முறைப்­படி பர­த­நாட்­டி­ய­மும் மேற்­கத்­திய நட­ன­மும் கற்­றுத் தேர்ந்­த­வர்.

அத­னால்­தான் தம்­மால் நட­னக் காட்­சி­களில் சிறப்­பாக ஆட முடி­கிறது என்­கி­றார். 'டிக்­கி­லோனா', 'நட்பே துணை' ஆகிய இரு படங்­க­ளி­லும் இவ­ரது நட­னம் சிறப்­பாக இருந்­த­தா­கப் பலர் பாராட்டி உள்ளனர்.

"நட­னம் என் வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான அம்­சம். நான் தொடர்ந்து முன்­னேற ஊக்­க­ம­ளிக்­கும் சக்தி நட­னம்­தான் என்­பேன். நட­னத்­தின் மீதான ஆர்­வம்­தான் என்னை திரைப்­பட நடி­கை­யா­க­வும் மாற்­றி­யது. மனம் தள­ரும்­போது, ஏதா­வது சிக்­கல் ஏற்­ப­டும்­போது நட­னத்­தில்­தான் கவ­னம் செலுத்­து­வேன். அதன் மூலம் மனம் அமை­தி­யா­கும்.

"விளை­யாட்­டி­லும் எனக்கு ஆர்­வம் அதி­கம். அத­னால்­தான் விளை­யாட்டை மையப்­ப­டுத்தி உரு­வான 'நட்பே துணை' படத்­தில் ஆர்­வத்­து­டன் நடித்­தேன்," என்­கி­றார் அனகா.

ஹாக்கி விளை­யாட்டை கதைக்­க­ள­மா­கக் கொண்டு உரு­வான அந்­தப் படத்­துக்­காக சில காலம் பயிற்சி பெற்­றா­ராம். தந்­தி­ர­மாக ஆட வேண்­டிய அந்த விளை­யாட்­டில் தாம் கற்­றுக்­கொள்ள நிறைய விஷ­யங்­கள் உள்­ளது என்­கி­றார். 'டிக்­கி­லோ­னா'­வில் பெண்­கள் குறித்து பேசப்­பட்ட கருத்துகள் விமர்­ச­னங்­களை எழுப்பி உள்­ளன. இது­கு­றித்து கேட்­டால், சினி­மாவை வைத்து அர­சி­யல் செய்­வ­தில் தமக்கு உடன்­பா­டில்லை என்­கி­றார்.

"திரைத்­து­றை­யில் சரி­யான அர­சி­யலை நாம் எதிர்­பார்க்க முடி­யாது. திரைப்­ப­டங்­களை பொழு­து­போக்கு அம்­சங்­க­ளா­கப் பார்க்க வேண்­டும். அதில் ஒரு கதை சொல்­லப்­ப­டு­கிறது, அவ்­வ­ள­வு­தான்.

"ஒரு கதா­பாத்­தி­ரம் பெண்­க­ளைப் பற்­றிய சில கருத்­து­களைச் சொல்­வ­தாக சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அது­தான் உண்மை என்று நினைத்­து­வி­டக் கூடாது," என்று சொல்­லும் அனகா, தமி­ழில் ஒரு படத்­தில் இலங்கைப் பெண்ணாகவும் மலை­யா­ளத்­தில் 'பீஷ்மா பர்­வம்' என்ற படத்­தில் மம்­மூட்­டி­யு­ட­னும் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.