திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
4d10e5ba-a7b7-4e5b-9b8b-92407aa50f47
-
multi-img1 of 2

கூட்டணியில் இணைந்த பகத் பாசில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் பகத் பாசில் ஒப்பந்தமாகி உள்ளார். இதையடுத்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார் பகத் பாசில். இதில் அவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜும் தனது அடுத்த படத்துக்காக பகத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.

உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்துள்ள அவர், இம்முறை வித்தியாசமான கதையுடன் களமிறங்குகிறாராம். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், பகத் பாசிலும் இக்குழுவுடன் இணைகிறார். எனினும் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்து விவரம் ஏதும் வெளியாகவில்லை.

அனேகமாக இதிலும் அவர்தான் வில்லன் என்றும் உதயநிதியின் நண்பராக நடிக்கிறார் என்றும் பலவிதமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாட்டு வண்டி ஓட்டிய ரம்யா நம்பீசன்

ஒரு திறமையான நடிகை எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்கத தயாராக இருக்க வேண்டும் என்கிறார் ரம்யா நம்பீசன்.

இப்படிச் சொல்வதோடு நிற்காமல், 'என்றாவது ஒரு நாள்' படத்தில் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறார்.

"கிராமத்தில் குடும்பக் கஷ்டத்தால் மாட்டு வண்டி ஓட்டிப் பிழைக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். முதல் நாள் மாடுகளை கையாளுவதில் சிக்கல் இருந்தது. அதன் பிறகு அவற்றுடன் நன்கு பழகி விட்டேன். இப்படம் விவசாயம், குழந்தைத் தொழிலாளர்கள், கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறது. எனவே சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை எதிர்பார்க்கலாம். அதே சமயம் படம் போரடிக்காது என்றும் உறுதியளிக்க இயலும்.

"உலக அளவிலான சில திரைப்பட விழாக்களில் பங்கேற்று சில விருதுகளையும் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் ரம்யா நம்பீசன்.