இரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய திரைக்கதையை நம்பி 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தை இயக்கியதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர்.
புதுமணத் தம்பதியர் திருமணம் முடிந்த கையோடு எதிர்கொள்ளும் சில அனுபவங்களை சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறாராம்.
"நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கும்போது சுற்றியுள்ள சிலர் சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள். புதுமணத் தம்பதியர் அவற்றைப் பின்பற்றுகிறார்களா, என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
"இப்படிப்பட்ட கதைக்கருவுடன் உலகத்தில் முதன்முறையாக உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும். அதேசமயம் இப்படியொரு கதையைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல.
"இதற்கு முன்பு பாக்யராஜ் இயக்கிய 'முந்தானை முடிச்சு' படம் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோன்ற தாக்கத்தை இந்தப் படமும் ஏற்படுத்தும். அவ்வளவு தரமான படைப்பாக உருவாகி உள்ளது," என்கிறார் ஸ்ரீஜர்.
இப்படத்தின் தயாரிப்பாளரின் உதவியோடுதான் நடிகர் சாந்தனுவிடம் கதை சொன்னாராம். இயக்குநர் பாக்யராஜ் மகன் என்பதால் சாந்தனுவுக்கும் திரைப்பட இயக்கம் தொடர்பான பல்வேறு நுணுக்கங்கள் தெரிந்திருப்பதாகச் சொல்கிறார்.
"நடிப்பில் பாக்யராஜ் சாரை பின்பற்றலாம் என்று சொன்னபோது சாந்தனு மறுத்துவிட்டார். நான் எனக்கென தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கறாராகக் கூறிவிட்டார். அவரது நடிப்பில் யாருடைய சாயலும் இருக்காது. நாயகியை தேடிப்பிடிப்பது சவாலாக இருந்தது. அப்போது ஒரு நண்பர் மூலமாக அதுல்யா ரவி அறிமுகமானார். சாந்தனு, அதுல்யா இடையேயான ஜோடிப்பொருத்தமும் உடல் மொழியும் அருமையாக அமைந்துவிட்டன," என்கிறார் ஸ்ரீஜர்.
, :
நகைச்சுவை மூலம் கோடம்பாக்கத்தில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துவிட்ட நிலையில் 'நாய் சேகர்' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் சதீஷ்.
அந்த உற்சாகம் ஒருபுறம் இருக்க, ரஜினியுடன் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் எதிர்வரும் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. அன்றுதான் சதீஷின் மகள் நிகாரிகாவின் முதல் பிறந்தநாள்.
"ஒரு தந்தையாக என் மகளுக்கு நான் அளிக்கும் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுதான். இது என்னை எந்த அளவுக்கு மகிழ்ச்சிப்படுத்தும் என்பதும் இந்தப் பரிசின் மதிப்பு குறித்தும் வளர்ந்த பிறகு நிகாரிகாவுக்குப் புரியும். என்னதான் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிவிட்டாலும், நிச்சயம் நகைச்சுவைக் கலைஞனாகவும் தொடர்ந்து நடிப்பேன்," என்கிறார் சதீஷ்.
'அண்ணாத்த' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், அந்தப் படத்தில் தனக்கும் ஒரு கதாபாத்திரம் இருப்பது தெரியாமலேயே ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கச் சென்றிருந்தாராம்.
ரஜினியைப் பார்த்ததும், "தெறிக்க விடுங்க சார்..." என்று சதீஷ் வாழ்த்து தெரிவிக்க, அருகில் இருந்த இயக்குநர் சிவா, "ஆமாம் சார்... தெறிக்க விடலாம். உங்களுக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது," என்று கூறியதும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனதாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்துக்கான கதையை எழுதும்போதே உங்களையும் மனதில் வைத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன். நீங்களும் நடிக்கிறீர்கள். இது உறுதி என்றார் இயக்குநர் சிவா.
"ரஜினி சாருடன் இருபது நாள்கள் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அவை மறக்க முடியாத நாள்கள். அவரைப் பற்றி பல தகவல்களைப் பிறர் சொல்ல கேட்கும்போது வியப்பாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட உச்ச நட்சத்திரமான அவரே தன்னைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும் அதைக் கேட்பதும் எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.
"தன்னை பெரிய நட்சத்திரமாகக் கருதிக்கொள்ளாமல் எளிமையாகப் பேசுகிறார் ரஜினி. அந்த அளவுக்கு பக்குவமான மனிதராக அவர் உருவாகி இருக்கிறார்," என்கிறார் சிவா.
'நாய் சேகர்' படத்தலைப்பு தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து பலர் இவரிடம் விசாரித்துள்ளனர். மூத்த நகைச்சுவை நடிகர் என்ற முறையில் வடிவேலுவுக்காக தலைப்பை விட்டுத் தந்திருக்கலாமே என்றுதான் பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். அதற்கான விளக்கத்தைப் பொறுமையுடன் விவரிக்கிறார் சதீஷ்.
"கடந்த 2019ஆம் ஆண்டு எனக்குத் திருமணமானது. அடுத்த ஐந்து தினங்களில் இயக்குநர் கிஷோர் என்னைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னார். அப்போதே 'நாய் சேகர்' என்ற தலைப்பைத்தான் குறிப்பிட்டார்.
"படத்தயாரிப்பு நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியபோது, இந்தத் தலைப்பு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் இருப்பதை அறிந்தோம்.
"அவரை நானே தொடர்புகொண்டேன். எனக்கு அவரிடம் உள்ள உரிமையில், 'டார்லிங், இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும்' என்று நான் சொன்னதும், 'வைத்துக் கொள்ளுங்கள் அன்பே' என்று சொல்லி அனுமதி கொடுத்தார்.
"கடந்த மே மாதம் என்னுடைய பிறந்தநாளையொட்டி படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை தயார் செய்துவிட்ட போதிலும், கொரோனா நெருக்கடியால் வெளியாகவில்லை.
"இப்போது நிலைமை பரவாயில்லை என்பதால் அந்தச் சுவரொட்டியை வெளியிடலாம் என்று முடிவு செய்தபோதுதான், வடிவேலு சார் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. நாங்கள் முழுப் படத்தையும் முடித்துவிட்டு, கதைக்குப் பொருத்தமான தலைப்பை வைத்துள்ளோம்.
"ஒருவேளை படப்பிடிப்புக்குப் போகும் முன்பே அவர்கள் தலைப்பைக் கேட்டிருந்தால் நிச்சயம் கொடுத்திருப்போம். நானும் வடிவேலு சாரின் ரசிகன்தான். இந்தத் தலைப்பை சொன்னதுமே அவரது நினைவுதான் வரும். ஆனால் படத்தை முடித்துவிட்டோம் என்பதால்தான் தலைப்பு விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறோம்," என்கிறார் சதீஷ்.
'நாய் சேகர்' படத்தை அடுத்து 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது. தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார்.
"அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிப்பதால் இனி நகைச்சுவை பக்கம் திரும்பமாட்டேன் என்று முடிவு செய்துவிடாதீர்கள். எனக்கான நல்ல, பொருத்தமான கதைகள் அமைந்தால் மட்டுமே நாயகனாக நடிப்பேன். நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் என்னைப் பார்க்க இயலும். இன்று வரை எனது வளர்ச்சிக்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்," என்கிறார் சதீஷ்.

