இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அரண்மனை 3'. இந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகி
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படங்கள் 'அரண்மனை', 'அரண்மனை 2'. இந்தப் பாகங்களைத் தொடர்ந்து 'அரண்மனை 3' படம்
உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாகவும் ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
வழக்கம்போல் இந்தப் படத்திலும் நகைச்சுவைக் கலைஞர்களை மொத்தமாகக்
களமிறக்கி உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
பேய்கள் சம்பந்தப்பட்ட கதை என்றாலே பாழடைந்த பங்களா, கைவிடப்பட்ட பழைய கட்டடம் என்று காட்டு வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் சுந்தர்.சி, 'அரண்மனை' முதல் பாகத்தை உருவாக்கியபோதே, இந்த நடைமுறையை உடைக்க வேண்டும் என்று முடிவு
செய்தாராம்.
அப்போதுதான் கலகலப்பாக இருக்கும் வீடு, நிறைய கதாபாத்தி ரங்கள், அதிக நகைச்சுவை என்று புதிய திட்டம் மனதில் உருவானது என்கிறார்.
படம் பற்றி கூறுகையில், "அரண்மனை போன்ற வீட்டை தேடிக்கண்டு
பிடிக்கத்தான் அதிகம் சிரமப்பட்டோம். பிறகு எப்படியோ குஜராத்தில் ஓர் அரண்மனை கிடைத்தது.
"எல்லாமே சரியாக அமைந்ததால்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான படத்தை மூன்று பாகங்களாக ரசிகர்களுக்குத் தர
முடிகிறது" என்றார்.
'அரண்மனை' பட வரிசைக்கு ரசிகர்களிடம் கிடைத்து இருக்கும் அங்கீகாரத்தைத் தக்கவைக்க வேண்டும்
என்பதற்காக சளைக்காமல் உழைத்திருப்பதாகச் சொல்பவர், மூன்றாம் பாகத்திலும் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.
"எனது படங்களில் எப்போதுமே நாயகிகளை முன்னிலைப்படுத்துவேன். இம்முறை நாயகனாக ஆர்யா நடித்து உள்ளார். எனவே அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கிறது.
"நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தோம். அதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும்
இப்போதுதான் அமைந்தது. ஆர்யா இந்தப் படத்தில் முறுக்கேறிய உடற்கட்டுடன் நடித்திருக்கிறார்.
"ஆர்யாவைப் பொறுத்தவரை இயக்கு நரை நம்பி தம்மை முழுமையாக ஒப்படைத்துவிடுவார். இயக்குநருக்கு உள்ள சிரமங்களையும் பொறுப்புகளையும் நன்கு உணர்ந்தவர்.
"இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நானும் விவேக்கும் மிகவும் நெருக்கமாகி விட்டோம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் ஒற்றையடிப் பாதையில் நடைப்
பயிற்சி மேற்கொள்வோம். அப்போது பேசிய விஷயங்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
"சிரிப்பு, பயம், திகில், காதல், நடனம், இனிமையான இசை எனப் பல்வேறு
அம்சங்கள் நிறைந்த, தரமான படமாக 'அரண்மனை 3' உருவாகி உள்ளது.
"இது குழந்தைகளையும் கவரும். ஒவ்வொரு காட்சியையும் திரையில் காணும்போது மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும்," என்றார்
இயக்குநர் சுந்தர்.சி.
அண்மையில் வெளியான இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியில் நடிகை ஆண்ட்ரியா கர்ப்பிணியாக இருப்பதுபோல் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளர். ஆர்யா, பேயாக மிரட்டியுள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளது. ஏன் ஆர்யா பேயாக மாறுகிறார்? ஆண்ட்ரியாவுக்கு என்ன நடந்தது? என விறுவிறுப்பு, பரபரப்பு குறையாமல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது முன்னோட்டக் காட்சியைப் பார்த்தாலே தெரிகிறது. படம் ஆயுதபூஜை அன்று வெளியாக இருக்கிறது.

