"என்னைப் பொறுத்தவரையில் திறமைதான் முக்கியம். திறமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்," என்கிறார் ஹிப்ஹாப் ஆதி தமிழா.
அண்மையில் இவரது இயக்கத்தில் உருவான 'சிவகுமாரின் சபதம்' படத்தைப் பார்த்த பெரும்பாலானோர் நன்றாக உள்ளது எனப் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடானது எதுவுமே இல்லை என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஆதி.
"இந்தப் படத்தில் 13 புது முகங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். 'மீசைய முறுக்கு' படத்திலாவது விவேக் சார், 'யு டியூப்' பிரபலங்கள் என ரசிகர்களுக்குத் தெரிந்த சில முகங்கள் இருந்தனர். ஆனால் இம்முறை அனைவருமே புது முகங்கள்தான். அனைவருமே திறமைசாலிகள். அதனால் திறமையை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ளோம்," என்கிறார் ஆதி.
அதேபோல் தனது படங்களில் தமிழ் பேசும் பெண்கள்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார். ஆத்மிகா தொடங்கி சிவகுமார் சபதம் மாதுரி வரை ஆதியுடன் இணைந்து நடித்த அனைத்து நாயகிகளுக்கும் நன்றாகத் தமிழ் பேச வரும்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளியேறிய இளம் பாடகர்களுக்கான போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ஆதி. அப்போது இளம் பாடகர்கள் அனைவரையும் வெகுவாகப் பாராட்டி உற்சாகமூட்டினார். மேலும், அவர்களில் ஒருவருக்கு தனது இசையில் பாடுவதற்கு வாய்ப்பு அளிப்பதாகவும் அறிவித்தார்.
அவரது இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. திறமைசாலிகள் எனத் தெரிந்து அவர்களை ஊக்குவிப்பதில் தயக்கமோ தாமதமோ கூடாது என்பதுதான் தமது கொள்கை என்கிறார் ஆதி.
"கலைக்கும் கலைஞனுக்கும் தவறு, சரி எனும் வரையறைகள் ஏதும் கிடையாது. ஒவ்வொரு கற்பனைக்கும் கலைஞன்தான் பொறுப்பு. சரி, தவறு என்கிற கோட்பாட்டுக்குள் கலையைக் கொண்டு வந்தால் அது கலையே கிடையாது.
"என்னைப் பொறுத்தவரைக்கும் என் கற்பனை எனக்கு சரியானது. அப்படித்தான் ஒவ்வொரு கலைஞனுக்கும். திரையுலகில் எதை மாற்ற வேண்டும், எதை சரிபடுத்த வேண்டும் என்கிற ஆராய்ச்சியில் எல்லாம் நான் ஈடுபடவில்லை. எதையும் சரி செய்யும் அளவுக்கு நான் வளரவில்லை. இங்கு சரிசெய்ய வேண்டிய அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று நறுக்குத் தெறித்தாற்போல் பேசும் ஆதி, அடுத்து 'அன்பறிவு', தெலுங்கில் 'ஏஜென்ட்' ஆகிய இரு படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.
'சிவகுமார் சபதம்' படத்தில் இடம்பெற்ற 'சிவகுமார் பொண்டாட்டி' என்கிற பாடலுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என்பவர், எந்தவித சர்ச்சையும் எழவில்லை என்கிறார்.
அந்தப் பாடல் இடம்பெறுவதற்கான காரணம் ரசிகர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் என்றும் கதைக்கு ஏற்ப அமைந்த பாடல் என்பதால் எதிர்ப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை என்றும் ஆதி கூறுகிறார்.
"அடுத்து என்ன என்று எல்லாருமே கேட்கிறார்கள். இசைத் தொகுப்புகள் வெளியீடு, பாடல் உருவாக்கம், இசைக் குழுவை வழிநடத்துவது என ஏதாவது ஒரு வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறேன். திரையில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் ஒரு பாடலுக்காக எந்த அளவு மெனக்கெடுகிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அதைவிட கொஞ்சம் அதிகமாக உழைக்க முடிவு செய்தபோது படங்களை இயக்கும் துணிச்சல் வந்தது.
"ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விக்க முடியும் எனும் நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு. இதுபோன்று நான் விரும்பிய அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து, மன நிறைவு கொள்கிறேன்," என்கிறார் ஆதி.
'ஓடிடி' தளங்களில் தமக்கு ஆர்வம் இல்லை என்று கூறப்படுவது சரியல்ல என்றும் திரையரங்குகளில் படம் பார்ப்பதில்தான் தமக்கு ஆர்வம் அதிகம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஓடிடியை நான் எதிர்க்கவில்லை. அது சூழலுக்கான தொழில்நுட்பம். என்னைக் கேட்டால் ஓட்டி ஓட்டி பார்ப்பபது ஓடிடி. மாறாக, ஒரே இடத்தில் அமர்ந்து படம் பார்ப்பதுதான் திரையரங்கம். எனக்கு திரையரங்கம் பிடித்திருக்கிறது," என்கிறார் ஆதி.

