விபத்துக்குப் பிறகு யாஷிகா ஆனந்தின் உடல்நலம் தேறி வருகிறது. அவர் நடித்துள்ள 'கடமையை செய்' படம் விரைவில் திரைகாண உள்ளது.
இந்தப் படம் யாஷிகாவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தருவதுடன், சில உயரங்களுக்கும் கொண்டு செல்லும் என்கிறார் இயக்குநர் வேங்கட் ராகவன்.
எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், மோகன் வைத்யா, சேஷு உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
கடமையைச் செய்யாததால் வரும் பிரச்சினைக்கும் கடமையை நிறைவேற்றுவதால் வரும் பிரச்சினைக்குமான தீர்வுதான் இந்தப் படம் என்கிறார் இயக்குநர். அதனால்தான் இப்படியொரு தலைப்பை தேர்வு செய்தாராம்.
"ஒவ்வொருவரும் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றினால் இந்த உலகில் பிரச்சினைகள் எழ வாய்ப்பு இல்லை என்பதுதான் நாங்கள் தெரிவிக்க விரும்பும் விஷயம். காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என்று ரசிகர்கள் பல்வேறு அம்சங்களை எதிர்பார்த்து திரையரங்குக்கு வருகிறார்கள். அதை மனதில் வைத்து அனைவருக்கும் அனைத்தும் இருக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி உள்ளோம். அதனால் ஆறு முதல் அறுபது வயதுள்ள அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்," என்கிறார் வேங்கட் ராகவன்.
யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கியதை அறிந்தபோது ஒட்டுமொத்த படக்குழுவும் கடும் அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிடுபவர், யாஷிகாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ததாகச் சொல்கிறார்.
"அவருக்கு ஏற்பட்ட நிலைமையைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போகிறது. அவர் சினிமாவை வெகுவாக நேசிக்கிறார். சினிமாவுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சிரமங்களையும் சவால்களையும் ஏற்கும் மனநிலை கொண்டவர்.
"காலை ஏழு மணிக்குப் படப்பிடிப்பு என்றால், சரியான நேரத்துக்கு வந்து நமக்காகக் காத்திருப்பார். இது அவரிடம் உள்ள தனிச்சிறப்பு.
"இளம் ரசிகர்கள் அவரை இதுவரை கவர்ச்சிப் பொம்மையாகப் பார்த்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் கவர்ச்சி என்பது அறவே இருக்காது. இதில் குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்துள்ளார். அதனால் கவர்ச்சிக்கு இடமே இல்லை.
"மிக வலுவான கதாபாத்திரம். இதுபோன்ற கதையில் தாம் இதுவரை நடித்ததில்லை என்று என்னிடம் சொன்னார். கதை கேட்டு முடித்த நிமிடம் தொடங்கி இதுவரை அனைத்து வகையிலும் ஆர்வம் காட்டினார்.
"படத்தின் பிற்பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம். அவற்றில் அருமையாக நடித்துள்ளார். இப்படத்துக்குப் பிறகு நதியா, ராதிகா, ரேவதி போன்று நடிப்பதாக யாஷிகாவுக்குப் பாராட்டு கிடைக்கும்," என்கிறார் வேங்கட் ராகவன்.

