தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வரும் ராஷி கண்ணா, தமிழில் சரளமாகப் பேச தீவிர முயற்சி களை எடுத்து வருகிறார்.
"தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்துவருவதால் தமிழ்மொழியைத் தீவிரமாகக் கற்றுவருகிறேன். திரையரங்குகளில் ஆயுதபூஜை தினமான நேற்று வெளியான 'அரண்மணை 3' திரைப்படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்துள்ளேன்.
"இப்படம் தொடங்கும்போது ஓரளவுக்குத் தமிழில் திக்கித் திணறி பேசினேன். இப்போது இன்னும் கொஞ்சம் தேறி உள்ளேன். தொடர்ந்து இன்னும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருவதால், தமிழ் மொழியைப் பிழையின்றி ெதளிவாகப் பேச ஆசைப்படுகிறேன். நான் நடிக்கும் படங்களில் நானே 'டப்பிங்' பேசவும் விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியான பல்வேறு படங்களிலும் நடித்து முத்திரை பதித்துள்ள ராஷி கண்ணா, 'இமைக்கா நொடிகள்', 'அடங்கமறு', 'சங்கத்தமிழன்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
இப்போது தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிப்பில் 'சர்தார்', 'சைத்தான் கே பச்சான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தனது திரையுலகப் பயணம் குறித்து தமிழக ஊடகத்துக்கு அளித்துள்ள காணொளி நேர்காணலில், ரசிகர்களின் கேள்விகளுக்கு ராஷி கண்ணா பதிலளித்துள்ளார்.
தனது காதல், திரை வாழ்க்கை, சம்பளம், பிடித்த நடிகர் நடிகை குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளவர், "ஆண்கள் நிறைய பேர் எனக்கு நண்பர்களாக உள்ளனர். ஆனால், காதலர் என்று யாரும் இல்லை.
"எனக்கு வரப்போகும் கணவருக்கு மூன்று குணங்கள் முக்கியமாக இருக்கவேண்டும். அவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ, அன்பானவராக, தனது வேலையில் அக்கறை உள்ளவராக இருக்கவேண்டும்.
"முக்கியமாக, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருக்கவேண்டும். இந்த குணங்களை உடைய ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்," என்று சொல்கிறார்.
"நான் யாருக்கும் சமைத்துக்கொடுத்தது இல்லை, ஆனால், நன்றாகச் சாப்பிடுவேன்," என்று சிரித்துக் கொண்டே கூறுபவர், "சம்பளம் பற்றி மட்டும் கூறமாட்டேன். ஏனெனில், இதனால் பெரும் பிரச்சினை வரும். அதனால் வேண்டாமே," என்கிறார்.
தனக்கு தமிழில் விஜய்யைப் பிடிக்கும் என்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு ஆகியோரைப் பிடிக்கும் என்றும் நடிகைகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்காவைப் பிடிக்கும் என்றும் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
அதோடு, "நானும் ஒரு சராசரி பெண்தான். பிரபல நடிகையாக இருந்தபோதும் ஒரு சாதாரண இந்தியப் பெண் என்பதே எனக்கு மன அமைதியைத் தருகிறது," என்கிறார் ராஷி கண்ணா.
, :
ராஷி கண்ணா


