மும்பை: நடிகை ஷெர்லின் சோப்ரா தங்கள்மீது அவதூறு பரப்புவதாகக் கூறி நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவும் வழக்கு தொடுத்துள்ளனர். அதற்காக ஷெர்லின் தங்களுக்கு ரூ.50 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜ் குந்த்ரா-ஷில்பா ஷெட்டிமீது ஷெர்லின் சோப்ரா ஏற்கெனவே பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னரும் மும்பை போலிசில் புதியதொரு புகாரை அளித்த ஷெர்லின், கணவனும் மனைவியும் தம்மைப் பாலியல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அவர்கள்மீது மோசடிக் குற்றச்சாட்டையும் ஷெர்லின் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில், ஷில்பா-குந்த்ரா தம்பதி, பொது ஊடகங்களில் தங்கள்மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இழப்பீடாக ரூ.50 கோடி வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முன்னதாக, வளர்ந்துவரும் நடிகைகளுக்குப் பணத்தாசை காட்டி, அவர்களை வைத்து பாலியல் காணொளிகள் எடுத்து, கைபேசிச் செயலியில் வெளியிட்டதாகக் கூறி, கடந்த ஜூலை 19ஆம் தேதி ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டார். பின்னர் சென்ற மாதம் 21ஆம் தேதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.