நடன இயக்குநர் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் படம் '3.33'. சந்துரு இயக்கும் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ருதி செல்வம்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரை நன்கு தெரிந்திருக்கும். சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இன்ஸ்டகிராமில் இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
ஸ்ருதியின் சொந்த ஊர் சேலம். சென்னையில் பிறந்தவர் என்றாலும், தந்தையின் பணி நிமித்தம் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை வடஇந்தியாவில்தான் இருந்தாராம்.
"அப்பா இந்திய விமானப்படை அதிகாரி. குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து வடஇந்தியாவில் வசித்து வந்ததால் இந்தி மொழி நன்றாகப் பேசுவேன்.
"தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்று சொன்ன என் தந்தை, கோவைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள கல்லூரியில் பொறியியல் கல்வி படிக்க வைத்தார். அங்கிருந்த நான்கு ஆண்டுகளில் ஆசை தீர தமிழில் பேசினேன்.
"நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அப்போதுதான் சக மாணவர் ஒருவர் தனது குறும்படம் ஒன்றில் என்னை நடிக்க வைத்தார். அதன் பிறகு பல குறும்பட வாய்ப்புகள் தேடி வந்தன," என்று தாம் நடிக்கத் துவங்கிய கதையை விவரிக்கிறார் ஸ்ருதி.
'மைபோட்ட கண்ணாலா' என்ற இசைத்தொகுப்பின் காணொளிப்பதிவு தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. கடந்த 2017ல் வெளியான அத்தொகுப்பை 12 மில்லியன் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர்.
படிப்பை முடித்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். நல்ல ஊதியம் கிடைத்தபோதும், உடன் பணியாற்றியவர்கள் 'ஏன் சினிமாவில் நடிக்கவில்லை' என்று கேட்டுள்ளனர்.
"நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன். என்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போதுதான் தனியார் தொலைக்காட்சியில் இருந்து அழைப்பு வந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்ற அழைத்தனர். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. தொலைக்காட்சித் தொடரில் நடிக்க விரும்புவதாகக் கூறியதால் அதற்கான வாய்ப்பு கிடைத்தது," என்கிறார் ஸ்ருதி.
சில தொடர்களில் நடித்து முடித்த நிலையில், கொரோனா ஊரடங்கு இவரையும் முடக்கிப் போட்டிருக்கிறது. எனினும், நேரத்தை வீணடிக்காமல் அண்மைய புகைப்படங்கள் சிலவற்றை தொடர்ந்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டு வந்துள்ளார். அதைப் பார்த்துதான் '3:33' படத்துக்கான நடிப்புத் தேர்வுக்கு அழைப்பு வந்ததாம். நேரில் சென்றபோது ரசிகர்கள் நன்கு அறிந்த ஒரு கதாநாயகி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வந்திருப்பதைக் கண்டு அசந்துபோனதாகச் சொல்கிறார். எனினும், இயல்பாக நடித்ததால் இவரைத் தேர்வு செய்தனராம்.
"இந்தப் படத்தில் கௌதம் மேனன் சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாடல்கள் ஏதும் இல்லாததால் சாண்டி மாஸ்டருடன் நடனமாடும் வாய்ப்பு அமையவில்லை. அவருக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கைவசம் மூன்று படங்கள் உள்ளன. எடுத்த எடுப்பிலேயே இப்படி வாய்ப்புகள் தேடி வருவது உற்சாகம் அளிக்கிறது," என்கிறார் ஸ்ருதி.
'3.33' திகில் படமாக உருவாகிறது. இயக்குநர் கதையை விவரித்தபோதே பயந்து நடுங்கினாராம்.
"இது குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து பயத்தில் அலறி ரசிக்க வேண்டிய படம். இது ரசிகர்கள் என்னைப் பற்றி பேச வைக்கும் என நம்புகிறேன்," என்கிறார் ஸ்ருதி.
, :
ஸ்ருதி செல்வம்

