வணிகப் படங்களை சகட்டு மேனிக்கு விமர்சிக்கக் கூடாது என்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அத்தகைய படங்கள் அவசியம் என்றும் சொல்கிறார் இளம் நாயகி ராஷி கண்ணா.
குறிப்பிட்ட ஒரு மொழிக்கு மட்டுமே தாம் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
"தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் தமிழில் சிறிய இடைவெளி ஏற்பட்டது உண்மைதான்.
"அதே சமயம் கடந்த 2018ஆம் ஆண்டு தமிழில் நான் முதலில் நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்துக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என் மீது காட்டி வரும் அன்பு அளவிட முடியாதது.
"அதன் பின்னர் தமிழில் நடிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறேன் என்றனர். அதுவும் சரியல்ல.
"தமிழில் நல்ல படங்கள் அமைகின்றன. அதனால் அவற்றைத் தவிர்க்க முடியாமல் நடிக்கிறேன்.
"எந்த மொழியாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்," என்கிறார் ராஷி.
தமிழில் கார்த்திக்குடன் 'சர்தார்' படத்திலும் தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்' படத்திலும் நடித்து வருபவர், அடுத்த ஆண்டில் மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறுகிறார்.
"தனுஷுடன் இணைந்து நடிப்பது நல்ல அனுபவம். அவர் மிக திறமைவாய்ந்த நடிகர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
"'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனனும் நடித்துள்ளார். அவரைப் போன்ற நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அரிதாகத்தான் கிடைக்கும்.
"ஒவ்வொரு காட்சியிலும் அபாரமாக நடிக்கிறார். அவருடன் இணைந்து நடித்த காட்சிகளை திரையில் காண ஆவலாக உள்ளேன். வணிகப் படங்களில் மட்டுமல்ல, சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்க நான் தயார். அப்போதுதான் நம் திறமையை மெருகேற்ற முடியும்," என்கிறார் ராஷி கண்ணா.

