ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'பஹீரா'. பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.
அமைரா தஸ்தூர் முதன்மை நாயகியாக நடிக்க, ரம்யா நம்பீசன், காயத்ரி, சாக்ஷி அகர்வால், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, யாஷிகா ஆனந்த் என மேலும் பலரைக் களமிறக்கி உள்ளார் ஆதிக்.
இதில் பிரபுதேவாவின் தோற்றம் வித்தியாசமாக இருக்குமாம். அவரை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள் என்கிறார் ஆதிக்.
இந்தப் படத்துக்கான கதையை எழுதும்போதே அமைரா தஸ்தூர் தான் கதாநாயகி என்று முடிவு செய்துவிட்டாராம். அதற்கான காரணங்களை அடுக்குகிறார்.
"என்னுடைய கதைக்கு மிக மென்மையான, எதுவுமே தெரியாத அப்பாவித் தோற்றத்துடன் உள்ள பெண்தான் தேவைப்பட்டார்.
"அப்போதே அமைரா தான் இதற்குப் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன். 'இந்தப் பெண் இப்படியும் பேசுவாரா' என்று ரசிகர்கள் திகைத்துப்போக வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த திகைப்பை அமைராவால் ஏற்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
"அவரும் என் மனதில் இருப்பதைப் புரிந்துகொண்டு, நான் அவரது கதாபாத்திரத்தை எவ்வாறு உருவாக்கி உள்ளேன் என்பதை நன்கு உள்வாங்கிக் கொண்டு நடித்துள்ளார்," என்று பாராட்டுகிறார் ஆதிக்.
அவரைத் தவிர இப்படத்தில் உள்ள மற்ற நாயகிகளுக்கும் உரிய முக்கியத்துவம் இருக்குமாம். மேலும் நாசர் சார், பாபா பாஸ்கர், மோகன் வைத்தியா, கோபிநாத் ரவி என்று பெரிய பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது.
'பஹீரா' எப்படிப்பட்ட படம்?
"பல்வேறு உலக மொழிகளில் 'சைக்கோ' வகைப் படங்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன. பெரும்பாலான படங்களில் 'சைக்கோ' கதாபாத்திரங்கள் கொடூரமானவையாக, தீய சக்தியாக, மனித இனத்துக்கு எதிரானவையாக மட்டுமே சித்திரிக்கப்பட்டிருக்கும். 'பஹீரா'வும் ஒரு சைக்கோ தான். ஆனால் இந்தக் கதாபாத்திரம் அனைவரையும் சிரிக்க வைக்கும். 'பஹீரா'வாக பிரபுதேவா நடித்துள்ளார்.
"அவரை நல்லவன், கெட்டவன் என்று இருவகையாக பார்க்க முடியும். நான் சொன்ன கதையைக் கேட்ட உடனேயே நடிக்க சம்மதித்துவிட்டார். அவர் ஒப்பந்தமான பிறகுதான் இப்படம் புதிய உயரத்தைத் தொட்டது. இப்போது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது. அனைவருக்கும் மனநிறைவு தரும் வகையில் தரமான படமாக உருவாகி வருகிறது," என்கிறார் ஆதிக்.

