இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு 'கூழாங்கல்' திரைப்படம் தேர்வாகி உள்ளது.
இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் கவுரவம் என திரையுலகப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகி உள்ளது 'கூழாங்கல்'. வினோத்ராஜ் இயக்கி உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே ரோட்டர்டாமில் நடந்த அனைத்துலகத் திரைப்பட விழாவில் 'டைகர் விருது' பெற்றுள்ளது 'கூழாங்கல்'.
இந்நிலையில், 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க இதைத் தேர்வு செய்துள்ளனர்.
வித்யா பாலன் நடித்த 'ஷேர்னி', விக்கி கவுஷல் நடித்த 'சர்தார் உதம்', மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய 'நாயாட்டு', தமிழில் இருந்து 'மண்டேலா', 'கூழாங்கல்' ஆகிய படங்களைத் தேர்வுக் குழுவினர் பரிசீலித்தனர்.
இந்தப் படங்களை இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட குழு அனைத்துப் படங்களையும் பார்வையிட்ட பின்னர் 'கூழாங்கல்' படத்தை ஒருமனதாகத் தேர்வு செய்ததாகத் தெரிகிறது.
2022ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும்.
"நமது கனவு நனவாக இன்னும் இரண்டு கட்டங்களே உள்ளன. இது பெருமைக்குரிய, மகிழ்ச்சியான தருணம்," என்று விக்னேஷ் சிவன் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவை அடுத்து திரையுலகத்தைச் சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'கூழாங்கல்' ஆஸ்கார் விருதைப் பெறும் என்று ரசிகர்களும் கூறியுள்ளனர்.

