தேசிய விருதை வாங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இதுவே முதல்முறையாக தாம் பெறும் பெரிய விருது என்றும் இந்த அனுபவம் புதிதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் 'ஷில்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு தாம் நடிக்கவில்லை என்றும் சேதுபதி கூறியுள்ளார்.
"நான் 'ஷில்பா' வாக நடித்தமைக்காக இந்த விருது கிடைக்கிறதென்பது, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
"இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை மட்டுமே நம்பி, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தேன்.
"அவருக்கு இந்தத் தருணத்தில் என்னுடைய முழு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
"ஷில்பா கதாபாத்திரம், இந்தளவுக்குப் பேசப்படும், விருது கிடைக்கும் என்ற எதிர் பார்ப்போடு நான் நடிக்கவில்லை.
"இயக்குநர் சொன்னார் என்பதற்காக, நடித்தேன். படம் வெளியானவுடன் மக்கள் எனது முயற்சி குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாய் இருந்தேன்.
"அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே மிகுந்த மனநிறைவாக இருந்தது. அவர்களைத் தொடர்ந்து தற்போது ஷில்பாவுக்கு விருது அங்கீகாரமும் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி," என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விருது பெற டெல்லியில் தங்க வேண்டி இருந்ததால் பலரை சந்திக்க முடிந்தது என்றும் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
"விருது வழங்கும் நிகழ்வு என்பதைவிட கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது பெரிய வாய்ப்பு. சில வேற்று மொழி கலைஞர்கள் என் படத்தைப் பார்த்த தாகக் கூறி பாராட்டியது, இன்னும் மகிழ்ச்சி யைக் கொடுத்தது," என்றார் விஜய் சேதுபதி.
இதற்கிடையே, விஜய்சேதுபதி ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்று கூறியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படம் விரைவில் வெளியாக உள்ளது.
'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பிறகு சேதுபதி தனக்குத் தந்த பரிசுதான் 'மாமனிதன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
"இது வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தி, சக மனிதர்களிடம் அன்பு காட்டச் சொல்லும் படம். இதில் சேதுபதி நடிப்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். எனக்கும் சேதுவுக்கும் இடையே எப்போதும் ஒருவித பேரன்புப் பரிமாற்றம் இருக்கும். இந்தப் படத்தில் அவரை நிறைய இடங்களில் ரசித்தேன்," என்கிறார் சீனு.
இந்தப் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளாராம் சேதுபதி. திருமணத்திற்கு முந்தையப் பருவம், இரண்டு குழந்தைக்குத் தந்தை, 20 வயதுப் பையனுக்குத் தந்தை என்று மூன்றுமே வித்தியாசமாக இருக்குமாம்.
சரி, 'மாமனிதன்' குறித்து சேதுபதி என்ன நினைக்கிறார்?
"'மாமனிதன்' பாதி கற்பனை, பாதி உண்மை. நிகழ வேண்டிய அனுபவங்களும் நிகழக்கூடாத அனுபவங்களும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கும் படம் இது.
"ராதாகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய கதை. யாராவது சாலையில் அடிபட்டுக் கிடந்தால் யாரும் உதவி செய்வதில்லை. இப்போதெல்லாம் குறைந்தபட்சம் 'ஐயோ' என்று பதறுவதைக் கூட காண முடிவதில்லை.
"ஆனால் எல்லோரும் அப்படி கிடையாது. அதை 'மாமனிதன்' திரையில் விவரிப்பான்," என்கிறார் சேதுபதி.
"ஒரு நல்ல படம் என்பது, அதை பார்க்கும் அனுபவத்தோடு மட்டும் முடிந்துவிடக் கூடாது. பார்த்தவரின் மனதில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாகத்தான் இதை உருவாக்கி இருக்கிறோம்," என்கிறார் சீனு ராமசாமி.

