திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
d761e062-e80d-4a6d-a56e-11048d66765c
-
multi-img1 of 3

 விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அந்தப் படத்துக்காக ஒப்பந்தமான இந்தி நடிகை அனன்யா பாண்டேவை (படம்) தயாரிப்புத் தரப்பு திடீரென நீக்கியதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார் அனன்யா. இதையடுத்து அவர் நீக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அனன்யாவோ அந்தப் படத்தில் தம்மை ஒப்பந்தமே செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து முன் அறிவிப்பு இன்றி தன்னை நீக்கியதாகக் கூறி வழக்கு தொடுத்துள்ளார் நடிகை தமன்னா (படம்).

தெலுங்கில் ஒளிபரப்பாகிய அந்த நிகழ்ச்சியில் இவருக்குப் பதிலாக வேறொரு பெண் தொகுப்பாளர் ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் தமன்னா.

சம்பள பாக்கி உள்ளதாலும் தயாரிப்புத் தரப்பின் ஒழுக்கமற்ற செயலினாலும் தமன்னா வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 சைவ உணவுக்கு மாறியதுதான் தமது அழகின் ரகசியம் என்று நடிகை பிரியாமணி (படம்) கூறி உள்ளார். தற்போது 'அந்தகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அழகு ரகசியத்தை தெரிவிக்குமாறு ஒரு ரசிகர் கோரிக்கை விடுக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தாம் சைவ உணவுக்கு மாறிவிட்டதாகவும் அதுவே தமது அழகின் ரகசியம் என்று தாம் கருதுவதாகவும் பிரியாமணி தெரிவித்துள்ளார்.

 முதல் முறையாக அஜித், தனுஷ் படங்கள் மோத உள்ளன. அஜித் நடிப்பில் உருவாகும் 'வலிமை' படத்தின் முக்கிய காட்சிகளை ரஷ்யாவில் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். கொரோனா விவகாரத்தால் அது பாதிக்கப்பட்டது. எனவே, அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் சமயத்தில்தான் 'வலிமை' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனுஷ் நடிக்கும் 'மாறன்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

 நகைச்சுவை நடிகர் குண்டு கல்யாணம் (படம்) சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், இவர் சிகிச்சைக்குப் பணமின்றி அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் குண்டு கல்யாணம்.

தற்போது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இவர் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற வேண்டியுள்ளது. தமக்குப் போதுமான வசதி இல்லாததால் திரையுலகத்தினர் உதவவேண்டும் என இவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 பார்த்திபன் இயக்கியுள்ள 'இரவின் நிழல்' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இது ஒரே ஒரு காட்சியை மட்டுமே கொண்டுள்ள படமாக உருவாகி உள்ளது. படத்தைப் பார்த்த ரகுமான், 'இது ஒரே ஷாட்டில் தயாராகும் முதல் படம் மட்டுமல்ல; முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்' என்று பாராட்டினாராம். இத்தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன். இந்தப் படம் மிக விரைவில் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.