சிம்பு நடித்துள்ள, 'மாநாடு' படத்தை வெளியிட முடியாதபடி மிரட்டல் விடுக்கின்றனர் என சிம்புவின் தாய் உஷா போலிசில் புகார் அளித்ததற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
சிம்பு நடித்திருக்கும் 'மாநாடு' படத்தை வெளியிட முடியாதபடி தங்களை ராயப்பன் மிரட்டுவதாக சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் "இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவரது வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்போம்," என்றும் அறிவித்திருந்தார்.
இவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மறுப்பு மனு ஒன்றை சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்துள்ளார்.
அதில் "சிம்புவை வைத்து 2016ல் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தைத் தயாரித்தேன்.
"இந்தப் படத்தில் சிம்பு சொன்னபடி நடித்துக் கொடுக்கவில்லை. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.
"படப்பிடிப்பு 50 விழுக்காடு முடிவடைந்த நிலையில், "படத்தை வெளியிடுங்கள். நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு ஈடாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன்," என்று சிம்பு உறுதி அளித்தார்.
"வேறு வழியில்லாமல் அவரை நம்பி நானும் படத்தை வெளியிட்டேன். படம் சரியாக ஓடவில்லை. 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போது தலைவராக இருந்த விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் விசாரித்தனர். அவர்களிடம் 'படம் நடித்து தருவதாக' சிம்பு உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் மாறிய பின், ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறார்.
"இது தொடர்பாக, சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்தேன். சங்க நிர்வாகிகள், நஷ்டத்தை ஈடுசெய்ய சிம்பு புதிய படத்தில் நடித்துக் கொடுப்பது பற்றித்தான் அவரது தாய் உஷாவிடம் கேட்டனர்.
"மற்றபடி கட்டப்பஞ்சாயத்து செய்ய வில்லை. உஷா பொய் புகார் அளித்துள்ளார். அதற்கு அவரது கணவரும் உடந்தை. என்னை ஏமாற்றிய சிம்பு, உஷா, டி.ராஜேந்தர் ஆகியோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.


