எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு, தனது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வாகா எல்லையில், ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இந்நிலையில் 'தார்' பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து 2012ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார் விஜய். அந்த காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. உண்மையான வாழ்க்கையிலும் அவர்கள் 'ரியல்' நாயகர்களாக இருக்கவேண்டும். 'ரீல்' நாயகர்களாக இருக்கக்கூடாது. வரி என்பது நன்கொடை அல்ல. கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு பணம் வானத்தில் இருந்து கிடைக்கவில்லை. ஏழை மக்களிடம் இருந்துதான் கிடைக்கிறது," என்று வன்மையாகக் கண்டித்திருந்தார்.
அதற்கு விஜய் தரப்பில் இருந்து, "இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னை புண்படுத்தியுள்ளன. குற்றவாளிபோல காட்டியுள்ளது. நிலுவை வரித் தொகையான ரூ.32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம்.
"வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்லவேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும் வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துகள்.
"கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருந்தது தேவையற்றது. என்னைத் தேச விரோதியாக கூறுவது தவறு," என்று மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் விஜய்.
தனி நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரிய வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.


