'அண்ணாத்த' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 'யூடியூப்' தளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கானோர் அத்தொகுப்பைக் கண்டு ரசித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இது தலைவர் திருவிழா' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'முத்து', 'அருணாச்சலம்', 'படையப்பா' உள்ளிட்ட படங்களின் அதிர்வுகளை இந்த முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் காண முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை திரையரங்கில் காண ஆவலாக காத்திருப்பதாகவும் தனுஷின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 'அண்ணாத்த' படத்தின் பாடல்கள், குறு முன்னோட்டம் ஆகியவை வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், தனுஷைப் போல் மேலும் பல திரையுலகப் பிரபலங்கள் 'அண்ணாத்த' முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வரவேற்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் இடம்பெற்றுள்ள 'கல்கத்தாவிற்கே காப்பு கட்டிட்டேன்', 'கிராமத்தான குணமாத்தானே பார்த்திருக்க, கோபப்பட்டு பார்த்ததில்லையே' என ரஜினி பேசும் வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ரஜினி ரசிகர்கள் இந்த முன்னோட்டக் காட்சியை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் சன் பிக்சர்ஸ் தனது அதிகாரபூர்வ 'யுடியூப்' சேனல் வழி இந்த முன்னோட்டத்தை வெளியிட்டது.
அடுத்த மூன்று மணி நேரங்களுக்குள் சுமார் 20 லட்சம் பேர் அதைக் கண்டு ரசித்ததாகத் தெரிகிறது. மேலும், அதில் இடம்பெற்றிருந்த காட்சியில் ரஜினி ஒரு மேசைக்குப் பின் அமர்ந்து பேசுகிறார். அந்த மேசையில், 'காளையன், ஊராட்சித் தலைவர்' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஊராட்சி மன்றத் தலைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது 'அண்ணாத்த'.