'ஜெய் பீம்' திரைப்படம் இதுவரை தமிழ்த் திரையுலகம் சொல்லாத உண்மைக்கதையைச் சொல்லும் என்கிறார் சூர்யா.
இதை நேர்மையான படைப்பாக உருவாக்க தங்களால் இயன்ற அனைத்தையும் முயற்சி செய்ததாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூகநலன் சார்ந்த விஷயங்கள் குறித்து தாம் எப்போதுமே தயங்கியது இல்லை என்றும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சொல்கிறார் சூர்யா.
"இதில் வழக்கறிஞராக நடித்து வருகிறேன். 1995ல் இருந்த வாழ்க்கைநிலை, நீதிமன்றக் காட்சிகள், நாங்கள் சொல்ல விரும்பும் உண்மைச் சம்பவம் என அனைத்துமே நேர்மையாகவும் யதார்த்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
"நம்மைச் சுற்றி கவனிக்கப்படாத பல கதாநாயகர்கள் வாழ்கின்றனர்.
"குறிப்பாக, வழக்கறிஞர்கள் குறித்தும் அவர்கள் இந்த சமுதாயத்துக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்தும் அலசி உள்ளோம்.
"அதே சமயம், ஒரு தனி நபரால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
"சுயசரிதைப் படங்கள் நம்மை நல்லவிதமாகப் பாதிக்கக் கூடியவை. அதே சமயம் 'காக்க காக்க', 'சிங்கம்' போன்ற படங்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றி உள்ளதாக சிலர் கூறுவதையும் கேட்டுள்ளேன்.
"மொத்தத்தில், இத்தகைய படங்கள் தமக்கான பொறுப்பை அதிகரிக்கச் செய்கின்றன. நம்மைச் சுற்றி நடப்பவற்றை சரிப்படுத்த வேண்டும், இதுவரை ஆலோசிக்காத விஷயங்கள் குறித்து பேசவைக்கும்," என்கிறார் சூர்யா.
இப்படம் இருளர், குறவர் சமூக மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசுகிறது. ஞானவேல் இயக்கி உள்ளார்.
நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்தான் இப்படத்தின் கதைக்கான அடித்தளம்.
"இதுபோன்ற கதைகளும் படைப்புகளும் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதுதான் இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கான உண்மைக் காரணம்.
"பல்வேறு உண்மைகளை ஒரு கதாபாத்திரத்தின் மூலம் திரையில் தோன்றச் செய்வது சவாலான விஷயம். இந்தப் படத்தில் அத்தகைய சவால்களை எதிர்கொண்டேன்.
"ஒட்டுமொத்தப் படக்குழுவும் இந்தக் கதையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. இதில் நடித்துள்ள அனைவருமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளனர்.
"படக்குழுவில் சிலர் இருளர், குறவர் மக்களுடன் சில நாள்கள் தங்கியிருந்தனர். வீட்டைப் பெருக்குவதில் தொடங்கி, வேட்டையாடுவது, சாப்பிடுவது, மின்சாரமோ அடிப்படை வசதியோ இல்லாத அம்மக்களின் வீடுகளில் தங்கி இருந்தது என அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்," என்று பாராட்டுகிறார் சூர்யா.
இதற்கிடையே, 'சூரரைப் போற்று' படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் சூர்யா.
"மறுபதிப்பின் ஓர் அங்கமாக இருப்பது உண்மையில் மனநிறைவு தருகிறது. அதற்கான எழுத்துப்பணி தொடங்கி உள்ளது. மிக விரைவில் மேலதிகத் தகவல்களை வெளியிடுவோம். நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தாமதிக்க மாட்டோம்.
"நானும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். நான் இயக்குநரோ எழுத்தாளரோ அல்ல. எனக்கு நம்பிக்கை அளிக்கும் படங்களைத் தயாரிக்கிறேன். நல்ல கதைதான் எனக்குத் தேவை. வெறும் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்கக் கூடிய படைப்புகள் தேவையில்லை.
"நானும் ஜோதிகாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். எனவே, மாறுபட்ட ஒரு கதைக்காக காத்திருக்கிறோம். என் மகனும் மகளும் பார்க்கும் வகையில் நல்ல படைப்பை விரைவில் கொடுப்போம்," என்கிறார் சூர்யா.
, :
சூர்யா