கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனீத் ராஜ்குமார் இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 46.
நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து, இன்று முற்பகல் 11.30 மணிக்கு பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் புனீத் அனுமதிக்கப்பட்டார்.
கன்னடப் படவுலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் இளைய மகன்தான் இவர்.
தம் தந்தை நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி, திரையுலகில் அடியெடுத்து வைத்த புனீத், ‘அப்பு’, ‘ராஜகுமார’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகன்.
‘பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட புனீத்தின் மறைவால் இந்தியத் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
“திறமையான நடிகரான ‘பவர் ஸ்டார்’ புனீத் ராஜ்குமாரின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. தமது நடிப்புத் திறமையாலும் எளிமையாலும் கன்னட மக்களின் இதயங்களைக் கொள்ளைகொண்டவர். அவரது மறைவு கர்நாடகாவிற்குப் பேரிழப்பு,” என்று கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் இல்லாதவர்களுக்கு வாரி வழங்கிய நடிகர் சோனு சூட், “இதயம் உடைந்துவிட்டது. உனது பிரிவால் எப்போதும் உழல்வேன் சகோதரா!” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.