பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா

பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா

1 mins read
Google News Preferred Icon

சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்த படம் பாலாவின் 'நந்தா'. அந்தப் படத்திற்கு பிறகு சூர்யாவை வேறு கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கினர். மீண்டும் பாலா இயக்கத்தில் விக்ரமுடன் சேர்ந்து 'பிதாமகன்' படத்தில் நடித்திருந்தார் சூர்யா. அந்தப் படத்தில் சூர்யா செய்த நகைச்சுவையை இன்று வரை யாரும் மறக்க முடியாது. அந்தப் படத்திற்குப் பிறகு எந்த வேடமாக இருந்தாலும் சூர்யாவால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தார்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கப் போவதாக சூர்யா டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், "என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர் பாலா அண்ணன். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்.

"18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான் நடிக்கப் போகிறேன். மீண்டும் ஓர் அழகிய பயணம் தொடங்க இருக்கிறது. அப்பா நீங்கள் எங்களை ஆசீர் வதிக்கவேண்டும். மீண்டும் அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

சூர்யாவின் டுவிட்டைப் பார்த்த ரசிகர்கள், "இந்தப் படமும் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை அண்ணா. வாழ்த்துகள். தயவுசெய்து இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளி யிடுங்கள். 'ஓடிடி' வேண்டாம்," என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.