வன்முறையும் பகையும் நிறைந்துள்ள சூழலில் ஓர் இளைஞனுக்கும் பத்து வயதுச் சிறுமிக்கும் இடையேயான அழகான உறவைப் பேசும் படைப்பாக உருவாகி உள்ளது 'குருதி ஆட்டம்'. மதுரைதான் கதைக்களம்.
"இது உறவுகளுக்காக நடக்கும் போராட்டத்தைச் சொல்லும் வழக்கமான கதை என நினைத்துவிடக் கூடாது. முற்றிலும் புதிய கோணத்தில் கதை சொல்லி இருக்கிறோம்," என்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
'8 தோட்டாக்கள்' என்ற தனது அறிமுகப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்தை தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தவர், இம்முறை அதர்வாவையும் பிரியா பவானி சங்கரையும் இயக்கி வருகிறார்.
"பிரியாவைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை எவ்வாறு நடிப்பில் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். இன்றைய தேதியில், கோடம்பாக்கத்தில் உள்ள புது முகங்களில் அவருக்குத்தான் முதலிடம் என்பது தெளிவாகிவிட்டது.
"தற்போது தயாரிப்பில் உள்ள முக்கியமான படங்கள் அனைத்திலுமே அவரைப் பார்க்க முடியும். இந்த காரணத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
"உண்மையாகவே, இந்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டோம்," என்கிறார் ஸ்ரீ கணேஷ்.
நாயகன் அதர்வா தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிடுபவர், வயதில் சிறியவர் என்றாலும், சினிமா குறித்த அதர்வாவின் புரிதல் தம்மை வெகுவாக ஆச்சரியப்படுத்துகிறது என்கிறார்.
"அவரை எதிர்பார்த்து நான் பரபரப்பாக காத்திருக்கும்போது அமைதியாகவும் அலட்டிக்கொள்ளாமலும் வந்து நிற்பார். களத்தில் இறங்கிவிட்டால் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு நெஞ்சை அள்ளும்.
"உணர்வுப்பூர்வமான கதை என்றாலும் அடிதடிக்கும் இடம் உள்ளது. மதுரையில் பெரிய ரவுடிக் கூட்டங்கள் இருப்பதாக கூறப்படுவது தவறு. அங்கு சுற்றித்திரிந்த போது இந்த உண்மை புரிந்தது. அவர்களில் பலர் தனி மனிதர்கள்தான். ஆனால், ஒரு அரசாங்கம் போல் செயல்படுகிறார்கள்.
"வெறும் காசு பணத்துக்காக மட்டுமே வெட்டு, குத்துகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. எல்லோருமே தங்களை கதாநாயகர்களாக நினைத்துக்கொள்கிறார்கள்.
"இன்னொருவரின் பயம் தனது பலம் என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. இதையெல்லாம் மையப்படுத்திதான் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். அதனால் படத்தில் யதார்த்தமும் உண்மையும் நிறைந்திருக்கும்.
"படம் முழுவதும் அடிதடி இருக்கும். ஆனால், அது சினிமாத்தனமாக இல்லாமல் உண்மையில் நடப்பது போல் தோன்றும்.
"இந்தப் படத்தில் மூத்த நடிகை ராதிகா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். வசனம், காட்சி அமைப்பு குறித்து அவர் எதுவுமே கேட்கவில்லை. இயக்குநர் என்ற முறையில் நான் கேட்டுக் கொண்டபடி அருமையாக நடித்துக்கொடுத்தார். அவருக்குப் பெரிய மனசு.
"இந்தக் 'குருதி ஆட்டம்' அதர்வா, பிரியா ஆகிய இருவருக்குமே வெற்றிப்படைப்பாக அமையும். ரசிகர்களின் மனதில் இறங்கி நிற்கும் படமாகவும் இருக்கும்," என்கிறார் ஸ்ரீ கணேஷ்.
'குருதி ஆட்டம்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.