கொரோனா நெருக்கடி வேளையில் தாம் ஆறு படங்களைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சூர்யா.
ஓடிடி எனப்படும் இணையத்தில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடும் ஏற்பாடு நிரந்தரமாக இருக்கும் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கொரோனா காலகட்டத்தில் திரையுலகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் முடங்கிப்போய் விட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் போய்விட்டது. ஒரு திரைப்படம் எடுத்தால் முந்நூறு தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
"இந்த இடைப்பட்ட காலத்தில் ஆறு படங்களை எடுத்திருக்கிறேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆறாயிரம் குடும்பங்கள் பலனடைந்துள்ளன. 'ஓடிடி' என்பது நிரந்தரமாக இருக்கப்போகும் ஒன்று. மாற்றங்களை எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு தலைமுறையே மாறுகிறது. அந்த மாற்றத்தைப் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
"திரையரங்குகளுக்காகவே உருவாகும் படங்கள் தயாரிப்பில் உள்ளன. அவை மிக விரைவில் திரைகாணும்," என்கிறார் சூர்யா.
தனது நடிப்பில் உருவாகி வரும் 'வாடிவாசல்', 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்கள் கொண்டாட்டமாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், பாலா படத்தில் நடிக்கும்போதே 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்திலும் நடிக்கப்போவதாகத் தகவல். பாலா தரப்பில் கதை விவாதம் இன்னும் முடியவில்லையாம். ஆனால் சிவா தயாராக உள்ளாராம்.
"ஒரே சமயத்தில் பாலா, சிவா ஆகிய இருவரது படங்களின் படப்பிடிப்பு நடந்தாலும் சூர்யாவுக்குப் பிரச்சினை இல்லை. ஏனெனில் இரு படங்களிலும் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கான தோற்றம் ஒரே மாதிரியாகத்தான் இருக்குமாம். அதனால் இரு படங்களிலும் ஒருசேர நடிக்க முடியும்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.

