'என் சிந்தனை ஓயவில்லை'

'என் சிந்தனை ஓயவில்லை'

3 mins read
e9b41918-250d-41a3-a566-3ecb7627967c
-

ஒரே நாளில் சசி­கு­மா­ரின் இரண்டு படங்­கள் வெளி­யீடு காண உள்­ளன.

சில நாட்களுக்கு முன்­பு­தான் 'உடன்­பி­றப்பே' படம் வெளி­யா­னது. ஜோதி­கா­வின் 50வது படம் இது.

"நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை என்­றா­லும், சசி­கு­மார் தயக்­க­மின்றி நடிக்க ஒப்­புக்­கொண்­டார். அவ­ரது பெருந்­தன்மை இன்­று­வரை மாற­வில்லை," என்­கி­றார் 'உடன்­பி­றப்பே' இயக்­கு­நர் இ.ரா.சர­வ­ணன்.

இந்­நி­லை­யில், 'ராஜ­வம்­சம்', 'கொம்­பு­வச்ச சிங்­கம்டா' ஆகிய இரு படங்­களும் இம்­மா­தம் ஒரே நாளில் வெளி­யா­கின்­றன.

"எதற்­காக இவ்­வ­ளவு அவ­ச­ரம் என்று கேட்­கிறார்­கள். என்னை நம்பி பெருந்­தொ­கையை முத­லீடு செய்­துள்­ள­னர். ஏற்­கெ­னவே கொரோனா விவ­கா­ரத்­தால் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்குப் பெரும் இழப்பு ஏற்­பட்­டு உள்­ளது.

"எத்­தனை விரை­வாக படங்­கள் வெளி­யா­கின்­ற­னவோ, அதற்­கேற்ப தயா­ரிப்­பா­ளர்­க­ளின் சிர­மம் குறை­யும். அது மட்­டு­மல்ல, நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்ள படங்­களை விரை­வாக முடிக்க வேண்­டிய கட்­டா­யம் எனக்­கும் ஏற்­பட்­டுள்­ளது.

"படம் இயக்கி பல ஆண்­டு­கள் ஆகி­விட்­ட­தால் மீண்­டும் இயக்­கு­நர் சசி­கு­மா­ராக மாற இருக்­கி­றேன். அதற்­கான ஏற்­பா­டு­கள் ஒரு­பு­றம் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன," என்­கி­றார் சசி­கு­மார்.

தற்­போது இரண்டு கதை­க­ளைத் தயார்­நி­லை­யில் வைத்­துள்­ளா­ராம். அவற்­றுள் ஒன்று, பிரம்­மாண்­ட­மான, பெரும் பொருட்­செ­ல­வில் தயா­ரிக்­கக்­கூ­டிய வர­லாற்­றுக் கதை­யாம். மற்­றொன்று மிக விரை­வாக எடுத்து முடிக்­கக்­கூ­டிய, குறைந்த செல­வி­லான படத்­துக்­கான கதை என்­கி­றார்.

இரண்டு கதை­க­ளை­யும் பட­மாக்­கு­வ­தற்­கான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­யில் தொடங்­கும் எனத் தக­வல்.

ஜோதி­கா­வு­டன் நடித்­தது நல்ல அனு­ப­வம் என்று குறிப்­பி­டு­ப­வர், ஜோதி­கா­வின் திறமை தம்மை அசர வைத்­த­தா­கச் சொல்­கி­றார்.

"எவ்­வ­ளவு கடி­ன­மான காட்சி என்­றா­லும் மிக எளிதாக ஒரே 'டேக்'கில் நடித்­து­வி­டு­வார். அது மட்­டு­மல்ல, உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­களில் அவர் 'கிளி­ச­ரின்' பயன்­ப­டுத்தி நான் பார்த்­த­தில்லை.

"காட்­சியை உள்­வாங்கி கதா­பாத்­தி­ர­மா­கவே மாறக்­கூ­டிய ஒரு­வ­ரால்­தான் இவ்­வாறு நடிக்க முடி­யும்," என்று பாராட்­டு­கி­றார் சசி.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் சசி நடித்து வெளி­யான முதல் படம் 'உடன்­பி­றப்பே'தான். மிக யதார்த்­த­மான கதை­ அம்­சம் கொண்ட இது­போன்ற படங்­களில் நடித்த வகை­யில் சில விஷ­யங்­களைக் கற்­றுக்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

திரை­யு­ல­கின் பல்­வேறு துறை­களில் நாட்­டம் கொண்­ட­வர் சசி. இன்று வரை இத்­த­கைய ஆர்­வ­மும் உழைப்­பும்­தான் தம்மை தொடர்ந்து இயங்க வைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

இடைப்­பட்ட காலத்­தில் சில தோல்­வி­க­ளைச் சந்­தித்­து உள்­ள­தாக ஒப்­புக்­கொள்­ப­வர், அவற்­றால் தாம் முடங்கி­வி­ட­வில்லை என்­றும் தமது சோதனை முயற்­சி­களை நிறுத்­தி­வி­ட­வில்லை என்­றும் கூறு­கி­றார்.

"நான் படம் இயக்கி பத்து ஆண்­டு­க­ளாகி­விட்­டன. தேசிய அள­வில் என்­னைப் பற்றி பேச வைத்­தது நான் இயக்கிய படங்­கள்­தான். கடந்த பத்­தாண்­டு­களில் வெறும் நடிப்­பு­டன் எனது பணி­களை நிறுத்­திக்­கொள்­ள­வில்லை.

"எனது படங்­க­ளுக்­கான கதை, திரைக்­கதை­களை மெரு­கேற்­று­வ­தில் இயக்­கு­நர்­க­ளுக்கு உத­வி­க­ர­மாக இருந்­துள்­ளேன். ஒரு காட்­சி­யைக் குறிப்­பிட்ட இயக்­கு­நர் எத்­த­கைய கோணத்­தில் எடுக்­கி­றார் என்று கவ­னிக்­கும்­போது எனக்­குள் உள்ள இயக்­கு­நர் சசி விழித்­துக்­கொள்­கி­றான்.

"அந்த வகை­யில் எனது அடுத்த படத்­துக்­கான எனது சிந்­தனை ஓய்­வெ­டுக்­கா­மல் செய­லில் உள்­ளது," என்­கி­றார் சசி­கு­மார்.

தம்மை பிரம்­மாண்ட நாய­கன் என்று ரசி­கர்­கள் குறிப்­பிட வேண்­டும், பெரும் செல­வில் உரு­வா­கும் படங்­களில் நடிக்க வேண்­டும் எனும் ஆசை­யெல்­லாம் தமக்கு இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், சரா­சரி மனி­த­ராக, சமூ­கத்­தில் ஒரு­வ­ராக தம்மை சித்­தி­ரிக்­கும் கதை­க­ளுக்­குத்­தான் முன்­னு­ரிமை அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

சசி­கு­மார் மீண்­டும் படம் இயக்க வேண்­டும் என்று அன்­புத்­தொல்லை கொடுப்­ப­வர்­களில் சமுத்­தி­ர­க்க­னி­யும் ஒரு­வர்.

"என் சகோ­த­ரர் சசி­யு­டன் பல படங்­களில் இணைந்து பணி­யாற்றி உள்­ளேன். ஆனால், 'உடன்­பி­றப்பே' படத்­தில்­தான் முதல் காட்­சி­யில் இருந்து இறு­திக்­காட்சி வரை ஒரு­சேர பய­ணம் செய்­தோம்.

"சசி­யின் அனைத்து முயற்­சி­க­ளுக்­கும் நான் துணை நிற்­பேன். அவ­ரது இயக்­கத்­தில் உரு­வா­கும் படத்­துக்­காக காத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் சமுத்­தி­ர­க்கனி.