தமிழ் சினிமாவில் சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளதுபோல் தெலுங்கில் குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரியதரிசி என்பவர் நாயகனாகி உள்ளார்.
இந்தப் படத்தில் அஞ்சலியை (படம்) நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கேட்ட சம்பளம் கிடைத்ததால் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அஞ்சலி.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'எப்.ஐ.ஆர்'. இது இணையத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல என்று அவரே கூறியுள்ளார். ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் விஷ்ணு விஷால். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர்.
'டாக்டர்' திரைப்படத்தின் வசூல் கோடம்பாக்க வட்டாரத்தை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. உலக அளவில் இப்படம் இதுவரை
80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். தீபாவளிக்குள் நூறு கோடி ரூபாயை எட்டிப்பிடிக்கும் என்கிறார்கள்.
இதற்கு முன்பு சிவா நடிப்பில் 'ரெமோ'தான் அதிக வசூல் கண்ட படமாக இருந்தது. இப்போது 'ரெமோ'வை 'டாக்டர்' முந்திவிட்டார். இதனையடுத்து, சிவா நடிப்பில் அடுத்து உருவாகும் 'டான்' படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 'டாக்டர்' படத்துக்காக சிவா 27 கோடி ரூபாய் கடன்சுமையை ஏற்றுக்கொண்டார். அந்த வருத்தம் இப்போது கிடைத்துள்ள வெற்றியால் மறைந்து போயுள்ளது.
தந்தை சிவகுமாரின் 80வது பிறந்த நாளன்று கார்த்தியும் சூர்யாவும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் பள்ளிக் காலத்து நண்பர்கள் என அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்காக தனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்தனராம். மேலும், விருந்தினர்களை தங்கள் சொந்த செலவில் வசதியான இடங்களில் தங்கவைத்து, பிறந்தநாள் நிகழ்விற்குப் பிறகு பத்திரமாக அனுப்பிவைத்து உள்ளனர்.
நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஆத்விக் தலைக்கவசம் அணிந்திருக்க, அருகில் நிற்கிறார் அஜித்.
சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அஜித் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உதவியால் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். அவரது மறைவை அடுத்து அம்மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் விஷால் ஏற்றுள்ளார். "புனித் ராஜ்குமார் 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை, 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். அவரது இந்த மகத்தான பணியின் சிறு பகுதியை இனி நான் மேற்கொள்ளப் போகிறேன்," என்று கூறியுள்ளார் விஷால்.
அடுத்த ஈராண்டுகளுக்கு அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம் அதர்வா. சில தோல்விப் படங்களை அடுத்து, அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தோல்விப் படங்களைக் கொடுத்து இருந்தாலும்கூட, அனுபவ இயக்குநர்களிடம் மட்டுமே இணைவது என்ற முடிவை இப்போதைக்கு மாற்றப்போவதில்லை என்றும் நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம் அதர்வா.