கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற 'கைதி' திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாகிறது.
மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்துக்கு ஜப்பானிய மொழியில் 'கைதி டில்லி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி படம் வெளியாகிறது. கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பானில் வெளியாவது இதுவே முதன்முறை. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இதற்கு முன்பு ரஜினி நடித்த 'முத்து', 'அண்ணாமலை' உள்ளிட்ட சில படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியீடு கண்டன. அவற்றுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது.
ரஜினிக்கு இன்றளவும் அந்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ரசிகர்கள் அவ்வப்போது குழுவாக வந்து ரஜினியைச் சந்தித்துச் செல்வதும் உண்டு.