'தல' என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் நடித்து முடித்திருக்கும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் பல அதிரடிக் காட்சிகள் கொண்ட படங்களை அண்மையில் வெளியிட்டது படக்குழு. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தை எதிர்பார்த்து தல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியானது. விருப்பம் இல்லாத பெண்ணைத் தொடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இந்தியில் 'பிங்க்' என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்திருந்த இந்தப் படம் தமிழில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து ஹெச் வினோத் இயக்கியிருந்தார்.
தொடர்ந்து சிறப்பான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அஜித் மீண்டும் போனி கபூர், ஹெச் வினோத்துடன்
கூட்டணி அமைத்து 'வலிமை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
'வலிமை' படத்தின் சுவரொட்டிகள்,
முன்னோட்டக் காட்சிகள் ஆகியவை வெளியாகி சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் தன்னுடைய பைக்கில் வாகா எல்லை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற புகைப்படங்களும் வலைத் தளங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
அவரது ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அண்மையில் 'வலிமை' படத்தின் சில படங்களைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அவற்றில் படக்குழு படம் எடுக்கும்போது எடுத்த படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் அந்தக் காட்சிகள் இணையத்தில் விரைவாக பகிரப்பட்டு வருகின்றன.
முதல் படத்தில் வரிசையாக 8 பைக்குகள் அந்தரத்தில் தலைகீழாக பறந்தபடி இருக்கின்றன. இரண்டாவது படத்தில்
அந்தரத்தில் பறக்கும் பைக்குகளுக்கு இடையே ஹெலிகாப்டர் ஒன்று பறக்கும் காட்சி உள்ளது.
அதற்கு அடுத்த படங்களில் அந்தரத்தில் பறக்கும் பைக்குகளை தூரத்தில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்து, படம் பிடிக்கும் படக்குழுவினர் உள்ளனர்.
படம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு
ஆண்டுகள் ஆனாலும் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏன் குறையாமல் உள்ளது என்பது இப்போதுதான் தெரிகிறது.
இப்படிப்பட்ட சண்டைக் காட்சிகள்
அடங்கிய படத்தைப் பார்ப்பதற்காக அஜித் ரசிகர்கள் விடாமல் படத்தைப் பற்றிய
செய்திகளைக் கேட்டு, காத்திருப்பதில் தவறே இல்லை என்றே பலரும் சொல்ல துவங்கிவிட்டனர்.
இந்தப் படத்தில் அஜித் முரட்டு
சிங்கிளாகவும் அஜித்தின் தோழியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் இந்தி குரல் பதிவு பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் 2018ல் வெளிவந்த 'ஆர்எக்ஸ் 100' என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றார். அதன்பிறகு சில படங்களில் நாயகனாக நடித்தார். 2019ல் நானி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கேங் லீடர்' என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அப்படத்தில் அவருடைய
வில்லத்தன நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
படங்களில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பு பற்றி அவர் கூறுகையில், "எனது உடல் தோற்றத்தைப் பார்த்தே 'வலிமை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 'கேங் லீடர்' படத்திலும் அந்த
தோற்றத்திற்காகத்தான் எனக்கு வாய்ப்பு வழங்கியதாக அப்படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் கூறினார்.
"அஜித் சார் போன்ற சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் முழுவதும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. இப்போதே பல தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றன. 'வலிமை' படம் என்னுடைய திரை வாழ்க்கைக்கு ஒரு புதிய திருப்பத்தைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.
"முதல் நாள் படப்பிடிப்பில் நான்
பதற்றத்துடன் இருந்தேன். அஜித் சார் என்னைத் தனியே அழைத்துச் சென்று
அமைதிப்படுத்தினார். அதை இன்னும் அப்படியே நினைவில் வைத்துள்ளேன்.
"மொத்த குழுவும் என்னைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனது வாழ்க்கையில் அஜித் சாரைப் போன்ற மிகப் பணிவான மனிதர் ஒருவரை இதுவரை பார்த்ததில்லை," என்று அஜித்தைப் பற்றி பெருமையாகப் பேசினார் 'வலிமை' படத்தின் வில்லன் கார்த்திகேயா.