விஜய்யும் சூர்யாவும் நேற்று முன்தினம் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நாயகர்கள் ஒன்றாக சந்தித்துக்கொள்வது மிகவும் அரிது. ஏதாவது பிரபலங்களின் திருமணம் என்றால்கூட தனித்தனி நேரங்களில்தான் வந்து செல்வார்கள். இந்நிலையில் பெருங்குடியில் அடுத்தடுத்த அரங்குகளில் ஒரே நிறுவனம் தயாரிக்கும் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படமும் சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் படப்பிடிப்புக்காக வந்த சூர்யாவும் விஜய்யும் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து மனம்விட்டுப் பேசிக் கொண்டனர்.
விஜய் நடித்த 'நேருக்கு நேர்' படத்தில்தான் சூர்யா அறிமுகமானார். பிறகு இருவரும் 'பிரண்ட்ஸ்' படத்தில் நடித்தனர். சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தின் இசை வெளியீட்டு
விழாவில் விஜய் கலந்துகொண்டார். அதன்பின் ஓரிரு விருது விழா உள்ளிட்ட சில நிகழ்வுகளில் இருவரும் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளில் சாதித்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன. கொவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினமும் நேற்றும் நடந்தன. மறைந்த பின்னணிப் பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு 'பத்ம விபூஷண்' விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விருது நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சார்பில் அவரது மகன் சரண் அதிபரிடம் இருந்து அந்த விருதைப் பெற்றுக்கொண்டார். பின்னணிப் பாடகி சித்ராவிற்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவிற்கு 'பத்மஸ்ரீ' விருதை அதிபர் வழங்கினார்.
அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இரண்டு படங்களில் துல்கர் சல்மான் குற்றவாளியாகவும் அதிரடி போலிசாகவும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் குற்றவாளியாக நடித்திருக்கும் 'குரூப்' படம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. இவர் போலிசாக நடித்திருக்கும் 'சல்யூட்' என்ற படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின்
எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கன மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளது. படப்பிடிப்புத் தளங்களை நீர் சூழ்ந்துள்ளதால் பிரபலங்களின் படப்பிடிப்புகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசியத்திற்குக்கூட வெளியில் போக இயலாத நிலையில் சென்னைவாசிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 'டான்' படத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அடைமழையிலும் விடாமல் 'டான்' குரல் பதிவு நடைபெற்று முடிந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் நேற்று பதிவிட்டுள்ளார்.

