உயிரோட்டமுள்ள, உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் இளம் நாயகி மிர்ணாளினி. தீபாவளியின்போது இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியீடு கண்டுள்ளன.
'எனிமி', 'எம்ஜிஆர் மகன்' ஆகிய அவ்விரு படங்களும் வசூல் ரீதியில் தயாரிப்புத் தரப்புக்கு மனநிறைவு அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு தீபாவளி தமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகச் சொல்கிறார் மிர்ணாளினி.
"இரு படங்களிலும் எனது கதாபாத்திரங்கள் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளன. விஷால் படத்தில் அமைதியான மருத்துவ மாணவியாகவும் இன்னொரு படத்தில் கலகலப்பான இளம் பெண்ணாகவும் நடித்துள்ளேன்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமானல் நிஜத்திலும்கூட நான் குறும்புக்காரப் பெண்தான். என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. யாராக இருந்தாலும் தயக்கம் இன்றி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கிவிடுவேன்.
'எம்ஜிஆர் மகன்' படத்தில் அத்தகைய கதாபாத்திரம் அமைந்ததால், அதிகம் மெனக்கெடாமலேயே இயல்பாக நடிக்க முடிந்தது. என்னை அமைதியாக இருக்கச் சொன்னீர்கள் எனில், அதுவே எனது வாழ்வின் மிகக் கடினமான பொழுதாக இருக்கும்.
"மருத்துவ மாணவியாக அமைதியான கதாபாத்திரத்தில் நடித்தது சவாலாக இருந்தது. எனினும் எனது கதாபாத்திரத்தையும் அதற்கான நடிப்பையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். விமர்சனங்களிலும் என்னைப் பாராட்டி உள்ளனர். அவைதான் எனக்கான தீபாவளிப் பரிசுகள்," என்கிறார் மிர்ணாளினி.
'ஓடிடி' தளங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தளங்களுமே தேவை என்று குறிப்பிடுபவர், திறமையை வெளிப்படுத்த பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார். இவரும்கூட 'டிக்டாக்' செயலியில் வெளியிட்ட காணொளிகள் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
"நமது இலக்குகளைச் சென்றடைய பல பாதைகள் உள்ளன. அவற்றுள் எதைத் தேர்வு செய்கிறோம், எப்போது அந்த முடிவை எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். காணொளிப்பதிவுகள், குறும்படங்கள் என பல வழிகள் உள்ளன.
"அதேசமயம் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காதவர்களும் கூட திரையுலகில் தொடர்ந்து அறிமுகமாகி வந்துள்ளனர். திறமையை ஒளித்து வைக்க முடியாது. அது நிச்சயம் ஏதோ ஒரு தளத்தின் வழி வெளிப்படும்," என்கிறார் மிர்ணாளினி.
தெலுங்கில் இவர் நடித்த 'கடலகொண்டா கணேஷ்' படம் வசூலைக் குவித்துள்ளது. எனினும் தெலுங்கில் தேடி வந்த பல வாய்ப்புகளை நிராகரித்துவிட்டாராம். காரணம், தமிழ் மொழியில்தான் சரளமாகப் பேச வரும் என்கிறார்.
"மொழியை அறிந்து, வசனங்களைப் புரிந்துகொண்டு நடிப்பது நிச்சயம் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழில் நடிப்பது வசதியாக இருப்பதால் என்னுடைய நடிப்பை மெருகேற்ற இயலும் என நம்புகிறேன்.
"மற்ற மொழிகள் என்றால் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். தெலுங்கிலும் மலையாளத்திலும் இப்படித்தான் செய்கிறேன்.
"கடினமாக உள்ளது என்றாலும் சமாளிக்க முடிகிறது," என்று சொல்லும் மிர்ணாளினி, அறிமுகமான வேகத்தில் ஐந்து படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இரண்டு புதுப்படங்களிலும் இணையத் தொடர் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
"தமிழ் அல்லாத பிறமொழிப் படங்களில் நடிக்கக்கேட்டு வந்த சில வாய்ப்புகளை நான் ஏற்க மறுத்தது உண்மைதான்.
"எதிர்மறையான, மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரங்களை நான் விரும்புவதில்லை. அதேவேளையில் நகைச்சுவையும் நையாண்டியும் உள்ள கதைக்களங்கள் என்றால் உற்சாகமாகி விடுவேன்.
"இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், அனைத்தில் இருந்தும் விலகி நின்று, இரண்டு மணி நேரம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றக் கூடிய கதைகளையும் கதாபாத்திரங்களையுமே நான் ஏற்க விரும்புகிறேன்," என்கிறார் மிர்ணாளினி.

