பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுக்கும் சூர்யா
'ஜெய் பீம்' வெற்றியை அடுத்து அடுத்த வெற்றிக்குத் தயாராகிறார் நடிகர் சூர்யா. இவர் தற்பொழுது எடுத்து இருக்கும் கதைக்களம் பொள்ளாச்சி சம்பவம்.
சில ஆண்டுகளுக்கு முன் விஸ்வரூபமாக கிளம்பிய அந்தச் சம்பவத்தை வைத்து 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. அதைப்போல சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் பாண்டிராஜின் 'எதற்கும் துணிந்தவன்' படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
'எதற்கும் துணிந்தவன்' முன்னோட்டக் காட்சியில் ஆள் உயர வாளை தூக்கிக்கொண்டு எக்கச்சக்க கோபத்தோடு வரும் சூர்யா நிஜமாகவே இளைஞர்களின் மனம் கவர்கிறார்.
தனிமையான பகுதியில், பாழடைந்த பங்களாவில் ஏராளமான இளைஞர்கள் தலைகுப்புறக் கிடக்க ஒருவனின் காலைப் பற்றி இழுத்துக்கொண்டு வரும் சூர்யா, கடும் கோபத்தில் இருக்கிறார்.
கோபத்துக்கான காரணம் என்ன என விசாரித்ததில் தெரிந்தவை இங்கே!
சில ஆண்டுகளுக்கு முன் பயங்கர பரபரப்பை ஏற்படுத்திய, தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்தே 'எதற்கும் துணிந்தவன்' படத்தை எடுக்கிறார்இயக்குநர் பாண்டிராஜ்.
உண்மை எப்போதும் வெளியே வந்த செய்தி
களைவிட பயங்கரமானதாக இருக்கும் என்பார்கள். அதுபோலவே 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் நடந்த பல விஷயங்களைக்கொண்டு கதை சொல்லியிருக்கிறாராம்
பாண்டிராஜ்.
'மாஸ்' நாயகன் பிம்பத்தை அடையத்தான் அத்தனை நடிகர்களும் தவம் கிடக்கிறார்கள். எளிதில் கிடைத்திடாத அந்த பிம்பத்தை அர்ப்பணிப்பு எனும் மந்திரத்தால் அடைந்தவர் சூர்யா.
ஆனால், அந்த பிம்பத்திற்குள்
மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் பலவிதமான கதைக்களங்களையும் கதாபாத்திரங்களையும் அவரால் செய்துபார்க்க முடிகிறதெனில் அது சினிமா எனும் கலையின் மீதான காதலும்
அர்ப்பணிப்பும் மட்டுமே.
நாயகன் என்ற பிம்பத்திற்கு பின்னால் சென்றால் ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியாது எனும் பாடத்தைத் தெரிந்து
வைத்திருப்பதால்தான் சூர்யாவால், `பசங்க-2' போன்ற படத்திலும் நடிக்க முடிந்தது.
இடையில் தொடர்ந்து தோல்விப் படங்கள் வந்து `சூர்யா இனி அவ்வளவுதான்' என காதுபட பேசியவர்களைச் `சூரரைப் போற்று' படத்தில் முகமெல்லாம் வியர்வை வழிய சுருட்டு பிடிக்கும் ஒற்றைக் காட்சி திருப்பி அடித்தது.
தோல்விகள் பல கண்டும் அவமானத்தில் கூனிக் குறுகாமல், கூன் விழுந்த முதுகுடன் குனிந்து நடித்தே சாதித்த வெறி, நடிப்பதைத் தாண்டி நல்ல படங்களை தயாரிக்கவும் இறங்கிய தைரியம், இது எல்லாவற்றையும்விட `ஒரு கலைஞனின் குரல் என்றும் சமூகத்திற்கானதாக இருக்கவேண்டும்' என்கிற தெளிவு, அதில் அவர் முன்வைக்கின்ற கருத்துகள், இழப்பதற்கு ஒன்றுமில்லை, மீட்பதற்கோ சொர்க்கமே இருக்கிறது எனும் சிந்தனை இப்படி எத்தனையோ குணங்கள் மூலம் சூர்யா, எதற்கும் துணிந்தவர் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
பொள்ளாச்சி விவகாரம் தண்ணியில் போட்ட கல்லாக கிடக்கும் இந்த வேளையில் மீண்டும் அதைக் கையில் எடுத்திருக்கும் எதற்கும் துணிந்தவரிடம் அச்சம் கொண்டு நிற்கிறது பொள்ளாச்சிக் கூட்டம்.