இணையத் திரைப்படத் தரவுத்தளமான ‘ஐஎம்டிபி’யின் உலகின் சிறந்த 250 திரைப்படப் பட்டியலில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜெய் பீம்’ முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டு வெளியான ‘தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன்’ திரைப்படம் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டது.
நடிகர் சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் 9.6 தரப்புள்ளிகளைப் பெற்றது.
‘தி ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன்’ திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் ‘தி காட்ஃபாதர்’ திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
‘தி ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட்’, ‘தி லார்ட் ஆட் தி ரிங்ஸ்: தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்’, ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘இன்செப்ஷன்’ ஆகியவை முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் படங்களில் சில.
இருளர் இன மக்கள், காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை அழுத்தமாகப் பதிவுசெய்த ‘ஜெய் பீம்’ படத்தில், அம்மக்களுக்கு உதவும் நேர்மையான வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.