'மேயாத மான்' படம் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த மாதம் 'ஓடிடி'யில் வெளியான படம் 'ஓ மணப்பெண்ணே'. இவருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் காதல் கதையாக உருவாகும் மற்றொரு படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் 'சபாபதி', 'ஜாங்கோ', 'கடைசீல பிரியாணி', 'அடையாள மீட்பு' ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 'ஓடிடி' தளத்தில் 'பொன் மாணிக்கவேல்' படம் வெளியாக உள்ளது. 'சபாபதி' படத்தில் சந்தானமும் 'ஜாங்கோ', 'கடைசீல பிரியாணி', 'அடையாள மீட்பு' ஆகிய படங்களில் புதுமுகங்களும் நடித்துள்ளனர். பிரபுதேவா நடித்து கடந்த சில வாரங்களாக வெளியாகாமல் முடங்கியிருந்த 'பொன் மாணிக்கவேல்' படம் 'ஹாட்ஸ்டார் ஓடிடி' தளத்தில் வெளியாகிறது.
ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானி நடிக்கும் படம் 'குட்டு கி கேர்ள்ஃபிரெண்ட்'. அந்தப் படத்தின் படப்பிடிப்பு பனாரஸில் நடந்து வந்தது. படக்குழுவினர் அங்கிருந்த ஹோட்டலில் தங்கி இருந்தனர். இடையில் தயாரிப்பாளர் ஹோட்டல் கட்டணத்தைக் கட்ட பணம் இல்லை என்று கையை விரித்ததால் ஹோட்டல் நிர்வாகம் படக்குழுவினரைப் பிடித்து வைத்துக்கொண்டது. மூன்று நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை 'ஜெய் பீம்' படம் மூலம் உலகிற்கு கொண்டு வந்தார் சூர்யா. பாதிக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி கூலிவேலை செய்து பிழைத்து வருவதை அறிந்து அவருடைய பெயரில் ரூ.10 லட்சத்தை வங்கிக் கணக்கில் போட்டு அதில் வரும் வட்டியில் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி வகுக்கவும் அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய்ச் சேரும்படி செய்யவும் முடிவு எடுத்து இருக்கிறார் சூர்யா.
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. அந்த மிரட்டலை விடுத்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்த போலிசார் அவரை கைது செய்தனர். இருந்தாலும் விஜய்யின் வீட்டிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பவர் ஸ்டார் சீனிவாசன் தற்பொழுது வனிதா விஜயகுமாருடன் இணைந்து 'பிக்கப் டிராப்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டாரை உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதுகு வலியின் காரணமாக பவர் ஸ்டார் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
1996ஆம் ஆண்டு 'செங்கோட்டை' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி.வி.சசிகுமார் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் 'செங்கோட்டை' படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்த 'உன்னை வாழ்த்தி பாடுகிறேன்' படத்தையும் இயக்கியவர். தமிழில் 'சன்' தொலைக்காட்சியில் வெளியான 'மகாபாரதம்' தொடரில் சில பாகங்களை இவர் இயக்கி இருந்தார்.