முதன்முறையாக 'பொன் மாணிக்கவேல்' படத்தில் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார் பிரபுதேவா.
அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாகவும் மறக்க முடியாததாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளைப் படமாக்கியபோது, தொடர்ந்து 36 மணி நேரம் ஓய்வில்லாமல் நடித்தாராம் பிரபுதேவா. அவர் இந்த அளவு ஒத்துழைப்பார் என எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் இயக்குநர் முகில்.
இந்தப் படத்தில் பிரபுதேவாவும் நிவேதா பெத்துராஜும் இணைந்து நடித்துள்ளனர். மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த காவல்துறை உயரதிகாரி பொன்.மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.
"இறுதிக்காட்சிகளைப் படமாக்கும்போது படத்தில் நடித்துள்ள அனைவரையும் அழைக்க வேண்டி இருந்தது. எனவே அவர்களுடைய கால்ஷீட்டை உறுதி செய்துவிட்டு, இரண்டு நாள்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க தீர்மானித்தோம்.
"ஆனால் அச்சமயம் பிரபுதேவா மொரீஷியஸ் செல்ல வேண்டி இருந்தது. அதனால் அதற்கு முன்பே படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம் என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டது. இதனால் புதுச்சிக்கல் ஏற்பட்டது.
"பிரபுதேவா சொன்னபடி திட்டமிட்டால் தொடர்ந்து 36 மணி நேரம் படப்பிடிப்பை நடத்த வேண்டியிருக்கும். அவரிடம் இதைச் சொன்னபோது, பரவாயில்லை... பார்த்துக் கொள்வோம் என்று கூறிவிட்டார். தொடர்ந்து இரவு பகலாக எப்படி வேலை செய்ய இயலும் என்று நினைத்தோம். ஆனால் அதுதான் நடந்தது.
"சாப்பிட கூட நேரம் இல்லை. அந்த 36 மணிநேரமும் அவர் எங்களுக்காக நடித்துக் கொடுத்தார். அதன்பிறகே வெளிநாடு சென்றார்," என்கிறார் முகில்.

