விக்ரமும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இது ரசிகர்களுக்கு உற்சாக செய்தியாக அமைந்துள்ள நிலையில், மேலும் ஓர் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன்.
இந்தப் படத்துக்கான கதையை எழுதியவர் கமல்ஹாசன். இப்போது கதையை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். மேலும், சிறிய கதாபாத்திரம் ஒன்றையும் அவர் ஏற்க இருப்பதாகத் தகவல்.
தற்போது படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள், பங்கேற்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தயாரிப்புத் தரப்பு பேசி வருகிறது. அனைத்தும் முடிவான பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
"இரு முக்கிய கதாபாத்திரங்களை மையப்படுத்தி கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. விக்ரம், விஜய் சேதுபதி இருவரில் யார் நாயகன், யார் வில்லன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே வில்லன், எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சேதுபதி. எனவே, இதிலும் அவரே வில்லத்தனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"எனினும் கமல்ஹாசன் கதை எழுதுவதால், அவர் விக்ரமை வில்லனாக்கவும் வாய்ப்புண்டு. விக்ரம், சேதுபதி இருவருக்குமே சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்," என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கமல் தயாரித்த 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துள்ளார் விக்ரம். சேதுபதி இப்போது கமல் நாயகனாக நடிக்கும் 'விக்ரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.