விக்ரம் பிரபு, வாணி போஜன் இணைந்து நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார்.
அமெரிக்காவில் திரைத்துறை தொடர்பான படிப்பை முடித்த கையோடு கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.
இது அதிரடி சண்டைக் காட்சிகளும் திகிலும் நிறைந்த படமாக இருக்கும் என்றும் பாரதியாரின் வார்த்தைகள் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், இந்த தலைப்பை தேர்வு செய்ததாகவும் சொல்கிறார் கார்த்திக் அத்வைத்.
"விக்ரம் பிரபு போன்ற நல்ல நண்பர் கிடைப்பது அரிது. அது மட்டுமல்ல, உடன்பிறந்த சகோதரர் போல் நடந்துகொண்டார். அவரது ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியாது.
"சிவாஜி, பிரபு ஆகிய இருவரின் நடிப்பும் அவருக்குள் வேர்விட்டிருந்தாலும், தனக்குள்ள தனித்துவமான நடிப்பைத்தான் இந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் வேறு எதுகுறித்தும் யோசிக்காமல் காட்சியில் முழுக்கவனம் செலுத்துவது அவரது வழக்கம். அவரை 'இயக்குநரின் நாயகன்' என்று தயங்காமல் குறிப்பிடலாம். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் கதாநாயகர்களின் பட்டியலில் விக்ரம் பிரபுவுக்கும் நிச்சயம் இடமுண்டு.
"ஒருமுறை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இரவு பகலாக படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரிடம் விவரம் தெரிவித்தபோது, எந்தக் கேள்வியும் எழுப்பாமல், எப்போது படப்பிடிப்பு என்று கேட்டார். அந்த ஒருவார காலமும் அவரது உழைப்பைக் கண்டு வியந்து போனேன்.
"தனது கதாபாத்திரத்தை விட்டு ஓர் அங்குலம் கூட அவர் நகரமாட்டார். இயக்குநராக நான் என்ன எதிர்பார்க்கிறேனோ, அதை தனது நடிப்பில் அப்படியே வெளிப்படுத்துவார். வசனம் அல்லது காட்சி அமைப்பில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருதினால், உடனே என்னிடம் தெரிவிப்பார். நான் ஏற்றுக்கொண்ட பிறகுதான் அந்த மாற்றம் நடக்கும். அவர் நினைத்திருந்தால், என்னைக் கேட்காமலேயே தன் இஷ்டப்படி நடித்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்ததே இல்லை," என்று விக்ரம் பிரபு குறித்து மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் கார்த்திக் அத்வைத்.
படத்தின் நாயகி வாணி போஜன் மிகுந்த திறமைசாலி என்று குறிப்பிடுபவர், சவாலான கதாபாத்திரங்களிலும் கூட அனாயசமாக நடிக்கும் ஆற்றல் வாணியிடம் உள்ளது என்கிறார்.
"திரைத்துறைக்கு வரும்போதே நல்ல பெயரோடும் அனுபவத்தோடும் வந்தவர் வாணி. அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து அனுபவம் பெற்றுள்ளார். அவரது அனுபவம் இந்தப் படத்தை விரைவாக எடுத்து முடிக்க உதவிகரமாக இருந்தது.
"வெறும் பொம்மையைப் போல் திரையில் வந்து போவதில் வாணிக்கு அறவே விருப்பம் இல்லை. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை எனில், அந்தப் படம் தமக்கு தேவை இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.
"குறிப்பிட்ட சில காட்சிகளில் அவருக்கு இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு வசனம் இருக்கும். முதன்முறையாக அப்படிப்பட்ட ஒரு காட்சியைப் படமாக்கியபோது, அவ்வளவு நீளமான வசனத்தை அவரால் பேசி நடிக்க முடியுமா என எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால், அவர் ஒரு டேக்கிலேயே வசனத்தை மளமளவெனப் பேசி முடித்துவிட்டார்.
"எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அவரால் நேரம் விரயமாகாது. நாம் எதிர்பார்த்ததைவிட நன்றாக நடித்து அசர வைப்பார். கூடிய விரைவில் தமிழில் அவர் முன்னணி நடிகையாக உருவெடுப்பார்," என்கிறார் கார்த்திக் அத்வைத்.
இதற்கிடையே, வாணி போஜன் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் தோல்வி அடையவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இருப்பினும் வாணி இன்னும் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை. மேலும், எந்தவிதமான கிசுகிசுக்களிலும் அவர் இதுவரை சிக்கியதில்லை.
ஜோதிகா, நயன்தாராவைப் போல் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்கள் அமைந் தால் தயக்கம் இன்றி நடிப்பேன் என்கிறார் வாணி.