இந்திப் படத்தில் நடிப்பதால், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், யுவராஜ் இயக்கவிருந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி உள்ளார். இத்தகவலை தயாரிப்பாளர் தரப்பு உறுதி செய்துள்ளது. இது மூன்று தம்பதிகளின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம். கால்ஷீட் பிரச்சினையால் தம்மால் நடிக்க முடியவில்லை என நயன்தாரா கூறினாராம்.
'அண்ணாத்த' படத்தின் கதையை இயக்குநர் சிவா தம்மிடம் விவரித்தபோது, கண்கலங்கியதாக கூறியுள்ளார் ரஜினி. "இந்தப் படம் உங்கள் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என சிவா சொன்னார். அதேபோன்று சொல்லி அடித்திருக்கிறார்," என்று தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.
சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ராசாக்கண்ணு என்பவர் மீது போலிசார் பொய் வழக்கை பதிவு செய்து அவரை சித்திர வதைக்கு ஆட்படுத்தி கொன்றதாக புகார் எழுந்தது.
இதை அடிப்படையாக வைத்து உருவான 'ஜெய் பீம்' படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை அறிந்த சூர்யா அண்மையில் அவரை நேரில் சந்தித்து பத்து லட்சம் ரூபாய் அளித்தார்.
இந்நிலையில், பார்வதி அம்மாளுக்கு சொந்த செலவில் வீடு கட்டித்தருவதாக நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார். நேற்று முன்தினம் பார்வதியை நேரில் சந்தித்துப் பேசியதுடன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார் லாரன்ஸ்.
மேலும், "நீங்கள் எனது பாட்டியைப் போலவே இருக்கிறீர்கள். அவர் காலமாகிவிட்டார். என் பாட்டி வடிவத்தில் உங்களைப் பார்க்கிறேன். நான் உங்களைச் சந்திக்கவேண்டும், வீடு கட்டித்தர வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் என நினைக்கிறேன்," என்று லாரன்ஸ் சொன்னதைக் கேட்டு பார்வதி அம்மாள் நெகிழ்ந்து போனார்.