தமிழ் சினிமாவில் தமது நடிப்புப்பசிக்குத் தீனிபோடும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் அமையவில்லை என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அதேசமயம் தெலுங்கில் தமக்கு சவாலான பாத்திரங்கள் அமைவதாகவும் அதனால்தான் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிவேதா நடித்துள்ள தமிழ்ப் படம் 'பொன்.மாணிக்கவேல்'. இதன் வெளியீட்டிற்குப் பிறகேனும் கோலிவுட்டில் தாம் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் அமையும் என நம்புவதாகச் சொல்கிறார்.
"இதுவரை நான் தமிழில் நடித்துள்ள படங்களில் 'திமிரு புடிச்சவன்' படத்தில் ஏற்ற மடோனா கதாபாத்திரம்தான் எனக்கு மனநிறைவைத் தந்தது. அதில் சுதந்திரமாக நடிக்க முடிந்தது. மேலும் எனது வசனங்களையும் நடிப்பையும் மெருகேற்ற வாய்ப்பு அளித்தனர். இதற்காக அப்படத்தின் இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்," என்று சொல்லும் நிவேதா, கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களை ஏற்க தாம் இன்னும் தயாராகவில்லை என்கிறார்.
கொரோனா முடக்க நிலையின்போது நாயகியை மையப்படுத்தும் சில கதைகள் தேடி வந்தனவாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவற்றை நிராகரித்துவிட்டாராம்.
"சவாலான, என் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பதாகக் கூறிவிட்டு, தனி நாயகியாக நடிக்க மறுத்தால் எப்படி என்று சிலர் கேட்பதில் நியாயம் உள்ளது. எனினும் முழுப் படத்தையும் எனது தோளில் சுமக்கும் அளவுக்கு நான் சினிமாவில் இன்னும் வளரவில்லை என்று நினைக்கிறேன்.
"நயன்தாரா, சமந்தா, திரிஷா போன்றவர்கள் என்னைப் பொறுத்தவரை உச்ச நட்சத்திரங்கள். அவர்களை சூப்பர் ஸ்டார்கள் என்று குறிப்பிட தயங்கத் தேவை இல்லை. நீண்ட காலமாக திரைத்துறையில் இருப்பதால் அவர்களுக்கு என தனிச் சந்தை மதிப்பு உள்ளது. அதேசமயம் எனக்கான சந்தை மதிப்பு வேறு ரகம்.
"தற்போது நான் வலுவான கதாபாத்திரங்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். எனினும் முதல் சோதனை முயற்சியாக தெலுங்கில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். அதில் கதைப்படி மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால் எனது கதாபாத்திரம்தான் படத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்லும்," என்கிறார் நிவேதா.
தமிழில் இவரது நடிப்பில் 'ஜெகஜ்ஜால கில்லாடி', 'பார்ட்டி' ஆகிய இரு படங்கள் வெளியீடு காண காத்திருக்கின்றன. இரண்டுமே வணிக அம்சங்கள் நிறைந்த படங்கள்.
"சில சமயங்களில் வணிகப் படங்களிலும் நடிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவைதான் சராசரி ரசிகர்களிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும். அந்த வகையில் இவ்விரு படங்களும் ஜனரஞ்சகமான படைப்புகளாக உருவாகி உள்ளன. படப்பிடிப்பின்போது மொத்த படக்குழுவினரும் உற்சாகமாக செயல்பட்டனர். நிறைய சுவாரசியங்கள் அரங்கேறின," என்கிறார் நிவேதா.
சினிமாவில் நடிக்கத் தொடங்கியது முதல் தாம் எதையும் திட்டமிட்டுச் செயல்படுத்தியதில்லை என்று குறிப்பிடுபவர், யாரையும் பின்பற்றி நடிக்கவில்லை என்கிறார். கிடைத்த வாய்ப்புகளை ஏற்று நடித்து வந்ததாகவும் இப்போது சற்றே முதிர்ச்சி அடைந்திருப்பதாக உணர்வதாகவும் சொல்கிறார்.
'பொன்.மாணிக்கவேல்' படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருக்கும் என்றும் அந்தப் படத்தின் நாயகன் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறுகிறார் நிவேதா.
"ஒரு பாடல் காட்சிக்காக இருவரும் இணைந்து நடனமாடினோம். படப்பிடிப்புக்குப் பிறகு எனக்கான நடன அசைவுகளை பலமுறை பயிற்சி செய்தேன். இதற்கு அரைநாள் தேவைப்பட்டது. அதன் பிறகுதான் நமது நடன அசைவு திரையில் எப்படிப் பதிவாகும் என்பதை உணர முடிந்தது. பிரபுதேவா எனக்கு பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து உதவினார்.
"அந்தப் பாடலை என் பெற்றோருடன் அமர்ந்து திரையில் பார்த்தபோது மனதுக்கு சற்றே நெருடலாக இருந்தது. காரணம், சில நடன அசைவுகளில் இருவரும் நெருக்கமாக இருப்போம். அதுகுறித்து பெற்றோர் ஏதாவது விமர்சிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், ஒரு நடிகையாக எனது பங்களிப்பை சரியாக வழங்கி இருப்பதாக இருவரும் பாராட்டியது வியப்பளித்தது," என்று கூறும் நிவேதாவை 'பெண் அஜித்குமார்' எனலாம்.
காரணம், அவரைப் போன்றே நிவேதாவுக்கும் கார் பந்தயங்களில் ஆர்வம் அதிகம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதற்கான பயிற்சியில் ஈடுபடுகிறார். ஃபார்முலா கார் பந்தயங்களுக்கான முதற்கட்ட பயிற்சியை முடித்துள்ளாராம். துபாயில் வசித்தபோது இதற்கு நேரம் இருந்தது என்கிறார்.
"கார் பந்தயம் என்பது விலை மதிப்பான விளையாட்டு. அதற்கான பயிற்சிக்கு பெருந்தொகை தேவைப்படும். எனக்கு வசதி இல்லாததால் பயிற்சியில் நீடிக்க முடியவில்லை. சினிமாவில் நடித்ததன் மூலம் இப்போது ஓரளவு பணத்தைச் சேமித்துள்ளேன். அதை வைத்து பயிற்சியைத் தொடங்கியுள்ளேன்," என்று சொல்லும் நிவேதா, மிக விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார்.

