திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
f0965706-7d6f-4067-9a0b-05c4efd0ef65
-
multi-img1 of 3

காஜலுக்குப் பதில் திரிஷா ஒப்பந்தம்

'இந்தியன் 2' படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதை அடுத்து, திரிஷாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்புத் தரப்பும் சம்மதம் தெரிவித்திருப்ப தால், திரிஷாவுடன் இப்படத்தின் இயக்குநர் சங்கரே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

"ஏற்கெனவே கமலின் 'தூங்கா வனம்', 'மன்மதன் அம்பு' ஆகிய படங்களில் திரிஷா நடித்துள்ளதால் மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவார். மேலும், சங்கர் படம் என்பதால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதும் திரிஷாவுக்குத் தெரியும். எனவே அவர் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.

'வீட்டை விட கல்விதான் முக்கியம்'

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்புச் செய்தியை தம்மால் ஏற்கவே முடியவில்லை என்கிறார் விஷால்.

இந்நிலையில், சொந்த வீடு வாங்குவதற்காக தாம் சேமித்துவைத்துள்ள தொகையை வைத்து புனித் ராஜ்குமார் நடத்தி வந்த 'சக்திதாமா' ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

"புனித் மிக திறமையான நடிகர். அவர் இறந்த பிறகு இரு தினங்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்குச் சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். குழந்தைகளின் கல்வி மிகவும் முக்கியம்.

"இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்குவார்கள் என நம்புகிறேன். புனித் விட்டுச்சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை," என்று விஷால் மேலும் கூறியுள்ளார்.

பிரபுதேவாவுக்கு விஜய் அழைப்பு

தனது அடுத்த படத்துக்கு நடனம் அமைக்குமாறு பிரபுதேவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜய்.

தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து, 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்.

இந்நிலையில், இந்தி திரையுலகில் படங்களை இயக்குவதில் முனைப்பாக உள்ள பிரபுதேவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் விஜய். தெலுங்கு ரசிகர்களைக் கவர வித்தியாசமான நடன அசைவுகள் தேவை எனக் கருதுவதால்தான் பிரபுதேவாவை அவர் நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் 'போக்கிரி', 'வில்லு' ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் விஜய்.

 நடிகர் விக்ரம் அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது 'கோப்ரா', 'மகான்', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். இவை அடுத்தடுத்து திரைகாண உள்ளன. இந்நிலை யில், அவரது 62ஆவது படத்தை ரஞ்சித் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 நடிகர் ரஜினிகாந்த் தனது சம்பளத்தில் 30 கோடி ரூபாய் வரை குறைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.