'ஜெய் பீம்' படம் தொடர்பான சர்ச்சை ஒருபுறமிருக்க, தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார் சூர்யா. பாலாவும் இவரும் கூட்டணி அமைத்துள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகத் தகவல்.
கதாநாயகியைத் தவிர படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகையர் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான தேர்வு அண்மையில் பாலாவின் அலுவலகத்தில் நடந்தது.
'நந்தா', பிதாமகன்', 'மாயாவி' ஆகிய படங்களுக்குப் பிறகு நீண்ட காலமாக பாலாவும் சூர்யாவும் இணையவில்லை. இப்போது பாலா கூறிய கதை பிடித்துப்போக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.
"என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர் பாலா. ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பழைய ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் அவர் முன் நிற்கிறேன். என் தந்தையின் ஆசியுடன், பாலா அண்ணனுடன் புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். அனைவரது அன்பும் ஆதரவும் நீடிக்க வேண்டுகிறேன்," என்கிறார் சூர்யா.
டிசம்பர் இறுதிக்குள் இந்தப் புதுப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, 'சிறுத்தை' சிவா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் எனத் தகவல். இரு படங்களையும் முடித்த பிறகே வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா கவனம் செலுத்த உள்ளார்.