நடிகர் விவேக்கின் மறைவு தந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார் அவரது நெருங்கிய நண்பர் 'செல்' முருகன்.
விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
விவேக் விட்டுச்சென்ற சில பணிகளை அவரது சார்பாக முன்னெடுத்துச் செல்வதுதான் தமது முக்கிய கடமை என்று சொல்பவர், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் எனும் விவேக்கின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.
"வழக்கமாக விவேக் சாரின் பிறந்தநாள் அன்று காலையில் கோவிலுக்குச் சென்று திரும்பிய பிறகு பலருக்கு அன்னதானம் செய்வோம். அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் அன்னதானம் வழங்குவதும் ஒன்று.
"இந்த ஆண்டு எனது வீட்டுக்கு அருகிலேயே சிலருக்கு அன்னதானம் செய்தேன். மரம் வளர்க்க வேண்டும் எனும் அவரது கனவை நிறைவேற்ற விரும்புகிறேன். இந்த ஆண்டு அதற்காக பெரிய அளவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இயக்குநர் வெற்றிமாறன் அந்த நிகழ்வில் பங்கேற்பதாக கூறியிருந்தார்.
"ஆனால், கடும் மழை பெய்ததால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அடுத்த சில தினங்களில் நிகழ்ச்சியை நடத்துவோம். முன்னதாக, ஒரு பள்ளிக்கூடத்தில் சில மரக்கன்றுகளை நட்டு வைத்தோம். விவேக் சாரை யாரும் மறக்க முடியாது. எனவே, அவரது கனவும் நிச்சயம் நிறைவேறும்," என்கிறார் 'செல்' முருகன்.