வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் அதிதி ராவ். அத்தகைய கதாபாத்திரங்களை தாம் மிகவும் நேசிப்பதாகவும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
அதிதி திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், ஒவ்வொரு மொழியிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
காரணம், எண்ணிக்கையில் இவருக்கு நம்பிக்கை இல்லையாம். நல்ல கதாபாத்திரங்கள் மட்டுமே தமக்கு முக்கியம் என்கிறார்.
"வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் நேர்த்தியாக எடுக்கப்படும் பட்சத்தில், அவை ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் அத்தகைய படங்களை வரவேற்கிறேன்.
"நான் முறைப்படி நடனம் பயின்றுள்ள நடிகை. அதனால் இயல்பாகவே இசையின் மீதான ஆர்வம் எனக்கு அதிகம்.
"அந்த வகையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். என்றாவது ஒரு நாள் அதற்கான வாய்ப்பு அமையக்கூடும் என நம்புகிறேன்," என்கிறார் அதிதி ராவ்.
இந்தி நடிகை ரேகா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும் தமக்கு விருப்பம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தம்மை வெகுவாகக் கவர்ந்த நடிகைகளில் ரேகாவும் ஒருவர் என்கிறார்.
சிறு வயது முதல் ரேகா நடித்த படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துள்ளாராம். அவரது நடிப்பும் உடல் மொழியும் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்கிறார்.
தற்போது தமிழில் நடன இயக்குநர் பிருந்தா கோபால் இயக்கும் 'ஹே சினாமிகா' படத்தில் நடித்து வருகிறார் அதிதி. இதையடுத்து, மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
அதிதி ஹைதராபாத்தில் பிறந்தவர் என்றாலும், தெலுங்கு மொழியில் சரளமாகப் பேச வராதாம். சிறு வயதில் வட இந்தியாவில்தான் அதிக காலம் இருந்துள்ளார்.
"தெலுங்கு பேச முடியாவிட்டாலும், வசனங்களை மட்டும் தெளிவாகப் பேசிவிடுவேன். கூடுமானவரை அவற்றுக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு நடிக்கிறேன். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் என்னை எழுப்பி கேட்டாலும் கூட வசனங்களைச் சரியாகச் சொல்லிவிடுவேன்.
"அதனால்தான் எனக்குரிய வசனங்களை முன்கூட்டியே தந்துவிடுமாறு இயக்குநர்களைக் கேட்டுக்கொள்வேன். இதன் மூலம் வசனங்களைப் பேசி நடிக்க பயிற்சி எடுக்க முடியும். அதன் பின்னர் எனது சொந்தக்குரலில் வசனங்களைப் பேசி நடிப்பேன்," என்கிறார் அதிதி ராவ்.
அண்மையில் தெலுங்குப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பாறைகள் நிறைந்த பகுதியில் படாக்கி உள்ளனர். அதற்காக வெறும் கால்களுடன் நடனமாடியுள்ளார் அதிதி.
"இது மிகவும் கடினமான விஷயம் என்று தெரியும். எனினும், இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிப்பதுதான் ஒரு நடிகையின் கடமை என்பதால் அவ்வாறு செய்தேன். அதற்காக மொத்தப் படக்குழுவும் என்னைப் பாராட்டியபோது கிடைத்த மனநிறைவு அலாதியானது,
"இன்னும் எத்தனை ஆண்டுகள் திரையுலகில் நீடிப்பேன் எனத் தெரியாது. அதுவரை நல்ல படங்களில் நடிப்பேன்," என்கிறார் அதிதி.